நான்காவது காவல் ஆணையத்தை நம்புவோம்!

‘புகார் கொடுக்க காவல் நிலையம் வரும் பொதுமக்களை அலைக்கழித்தால், அனைவரையும் கூண்டோடு கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு மாற்றிவிடுவேன்’ என்று காவல்துறை உயரதிகாரி ஒருவர் வாக்கி டாக்கி மூலம் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு எச்சரிக்கை விடுக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

‘கடமையைச் சரிவரச் செய்யாதவர்கள் தென்மாவட்டங்களுக்குப் பணியிடமாற்றம் செய்யப்படுவீர்கள்’ என்று எச்சரிக்கப்படும் பழக்கம் கடந்த கால் நூற்றாண்டு காலமாக தமிழ்நாடு காவல்துறையில் இருந்து வருகிறது. இம்மாதிரியான எச்சரிக்கைக்குக் காரணம் தென்மாவட்டங்களில் காவல்துறையின் பணி கடுமையானதாகவும், ‘மேல் வருமானம்’ குறைவானதாகவும் இருப்பதுதான்.

பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது காவல் நிலையங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் தவிர்க்கப்படுவது ஏன்? சரியான முறையில் பணிசெய்யாத காவலர்களையும், காவல் அதிகாரிகளையும் பணியிடமாற்றம் செய்வதின் மூலம்;தான் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியுமா?

காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் அனைத்து புகார்கள் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கத் தேவையான எண்ணிக்கையில் காவல்துறையினர் இல்லை என்பதே உண்மை நிலை.

காவல்துறையின் செயல்திறனை அளவிட, பதிவான வழக்குகளின் எண்ணிக்கையை அளவுகோலாகக் கருதும் நிலை நம் நாட்டில் நிலவுகிறது. குற்ற வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும் பொழுதெல்லாம், சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என்ற கண்டனத்தை காவல்துறை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இந்நிலையில், காவலர்கள் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, காவல்துறையில் ஆதிக்கம் செலுத்திவரும் கையூட்டும், சிபாரிசுகளின் அடிப்படையில் புறக்கணிக்கப்படும் நியாயமான புகார்களும் காவல்துறைக்கு எதிரான மனநிலையை பொதுமக்களிடம் ஏற்படுத்தி வருகின்றன.

சாலை விதிமீறல்களைக் காரணம் காட்டி, வாகனங்களில் பயணிப்பவர்களுக்குத் தொல்லை கொடுப்பதும், அதன் நீட்சியாக நிகழும் கையூட்டு பறிமாற்றமும் காவல்துறை மீது வெறுப்புணர்வை ஏற்படுத்துவதில் முன்னிலை பெறுகின்றன.

பொதுமக்களின் அதிருப்திக்குக் காரணமான காவலர்களையும், அதிகாரிகளையும் பணியிடமாற்றம் செய்வதால், பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுமானால் ஆறுதல் அடையலாம். ஆனால், அது காவல்துறையின் பணித்திறனை மேம்படுத்தாது.

காவல் நிலையப் பணிகளைத் தினந்தோறும் கண்காணித்து, வழிநடத்த பல்வேறு நிலைகளில் உயரதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களின் கண்காணிப்பில் ஏற்படும் குறைபாடுகள், காவல் நிலையங்களில் நிகழும் பல்வேறு விரும்பத்தகாத செயல்களுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன.

காவல்துறையில் வெளிப்படும் மனித உரிமை மீறல்கள், ஜாதிய உணர்வு, அரசியல் சார்பு நிலைபாடு போன்ற காரணங்களால் பொதுமக்களின் நியாயமான புகார்களுக்கு காவல் நிலையங்களில் உடனடி நடவடிக்கை மறுக்கப்பட்டாலும், அச்செயல்களின் பின்னணியில் கையூட்டு இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்தியாவிற்கான காவல் சட்டத்தை 1861-ஆம் ஆண்டில் வடிவமைத்து, ‘காவல்துறை’ என்ற அமைப்பை ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஏற்படுத்தினர். காவல்துறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, சீரமைக்க 1902-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட காவல் ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சில கருத்துகள் இன்றைய சூழலுக்கு பொருந்தும் வகையில் உள்ளன. 

காவல் நிலையங்களின் செயல்பாடுகளில் கையூட்டு ஆதிக்கம் செலுத்தி வந்தது என்றும், பொதுமக்களின் நன்மதிப்பை பெறுவதற்கு மாறாக, பொதுமக்களை அடக்கியாளும் முறையை காவல்துறையினர் கடைபிடித்தனர் என்றும், காவல்துறையினருக்குப் போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை என்றும் 1902-ஆம் ஆண்டைய காவல் ஆணைய அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

களப்பணியாற்றும் காவல்துறையினர் பொதுமக்களிடம் இருந்து அந்நியப்படுத்தி இருந்ததும், பொதுமக்களை அடக்கியாளும் முறையைக் கடைபிடித்ததும், ஆங்கிலேய அரசாங்கத்தின் நம்பிக்கைக்கு உரியவர்களாகச் செயல்பட்டதும் இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களுக்கு உகந்ததாக இருந்ததால், காவல் நிலையங்களில் நிலவிவந்த கையூட்டை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

இந்தியா விடுதலை அடைந்த பின்னரும், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட ‘காவல் சட்டம்-1861’ சிற்சில மாற்றங்களுடன் தொடர்ந்து நடைமுறை படுத்தப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மட்டத்தில் நிலவிவந்த கையூட்டு கலாச்சாரம், சுதந்திர இந்தியாவில் காவல்துறை உயர் அதிகாரிகள் இடையேயும் பரவத் தொடங்கியது.

காவல்துறையின் கையூட்டு கலாச்சாரத்தில் உள்ளுர் தாதாக்களும், பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களில் ஒரு சாராரும் இணைந்துள்ளனர் என்பதை மாநிலங்கள் பலவற்றில் நடத்திய ஆய்வுகளும், மாநில அரசுகள் கடந்த காலத்தில் அமைத்த காவல் ஆணையங்களின் அறிக்கைகளும் சுட்டிக் காட்டுகின்றன.

இந்தியா விடுதலையடைந்து கால் நூற்றாண்டு காலத்திற்குள்ளே காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி பொதுமக்களிடையே வெளிப்படத் தொடங்கியது. காவல்துறையை சீர்படுத்துவதற்காக 1977-ஆம் ஆண்டில் தேசிய காவல் ஆணையம் அமைக்கப்பட்டது. காவல்துறையின் பல அமைப்புகளில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த காவல் உயரதிகாரிகளிடம் தேசிய காவல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.

நடைமுறையில் இருந்துவரும் காவல்துறையினருக்கான நடத்தை விதிகளின்படி, சிறப்பாக பணிபுரியும் காவல்துறையினருக்கு பண வெகுமதியும், தவறு செய்பவர்களுக்கு தண்டயையும் வழங்கும் முறை தற்பொழுது பயனற்றதாக மாறிவிட்டது என்ற கள நிலவரத்தை காவல் உயரதிகாரிகள் தேசிய காவல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.

கையூட்டு பெறும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக் கொள்ளும் அரணாக அரசியல்வாதிகளில் ஒரு சாரார் இருந்து வருகின்றனர். அதனால், கையூட்டு பெறும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் தைரியம் உயரதிகாரிகள் பலருக்கு இருப்பதில்லை என்றும், உயரதிகாரிகளின் இயலாமையே நேர்மையான காவலர்களையும், அதிகாரிகளையும் காலப்போக்கில் கையூட்டு பெறத் தூண்டும் சூழலை ஏற்படுத்துகிறது என்றும் தேசிய காவல் ஆணைத்தின் மூன்றாவது அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

தமிழ்நாடு காவல்துறையை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளைக் கண்டறிய, தமிழ்நாடு முன்னாள் உள்துறை செயலர் பூர்ணலிங்கம் தலைமையில் 2007-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட மூன்றாவது காவல் ஆணையம் காவல்துறையில் அதிகரித்து வரும் கையூட்டு கலாச்சாரத்திற்கான காரணங்களை ஆய்வு செய்து, பரிந்துரைகள் வழங்கியுள்ளது.

காவல்துறையில் கையூட்டு அதிக அளவில் நிலவும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, திருட்டு வீடியோ ஒழிப்பு பிரிவு, போதைப் பொருள்கள் நுண்ணறிவு-புலனாய்வுத்துறை, உணவுப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போன்ற அமைப்புகள் கலைக்கப்பட வேண்டும் என்ற மூன்றாவது காவல் ஆணையத்தின் பரிந்துரை இன்றுவரை நடைமுறை படுத்தப்படவில்லை.

காவல் நிலையங்களில் பணிபுரிபவர்களுக்கு முன்மாதிரியாக, காவல் உயரதிகாரிகள் நேர்மையாளராகத் திகழ வேண்டும் என்ற மூன்றாவது காவல் ஆணையத்தின் பரிந்துரை கனவாகவே இருந்து வருகிறது.

நேர்மையாகப் பணிபுரியும் காவல்துறையினருக்கு பதக்கங்கள் வழங்கி, ஊக்கப்படுத்த வேண்டும் என்ற மூன்றாவது காவல் ஆணையத்தின் பரிந்துரையும் பல நேரங்களில் புறக்கணிக்கப்படுகிறது. காவல்துறையில் பதக்கங்கள் பெற்ற பலர், கையூட்டு பெறுவதில் கைதேர்ந்தவர்கள் என்பதை காவல்துறையில் பணிபுரியும் பலர் அறிவார்கள்.

காவல்துறையை வழிநடத்தும் உயரதிகாரிகளில் ஒரு சாரார் தங்களை அரசியல் கட்சிகளுடன் அடையாளப்படுத்திக் கொண்டுள்ள நிலையைத் தற்பொழுது காணமுடிகிறது. அதன் நீட்சியாக களப்பணியாற்றும் காவல்துறையினரும் அவரவர் விருப்பத்திற்கேற்ற அரசியல் கட்சியுடன் தங்களை இணைத்துக் கொண்டு செயல்படும் நிலை பல இடங்களில் வெளிப்படுகிறது. இதுவே நிகழ்கால காவல்துறை எதிர்கொண்டுவரும் மிகப் பெரிய சவால் ஆகும்.

மாநில காவல்துறையில் பணிபுரிபவர்களில் 85 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் காவலர்கள். பணியில் சேரும் பொழுது அவர்களுக்கு வழங்கப்படும் ஏழு மாதப் பயிற்சிக்குப் பின்னர், எவ்வித பயிற்சியும் அவர்களின் பணிக் காலத்தில் வழங்கப்படுவதில்லை. பணியிடை பயிற்சி மையங்கள் சில மாவட்டங்களில் செயல்பட்டாலும், அவை செயல்திறன் குன்றிய நிலையில் இயங்கி வருகின்றன.

சமுதாயத்தில் நிகழும் குற்றங்களைக் கண்டறியவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் போதிய பணியிடை பயிற்சி இன்றி பணிபுரியும் காவலர்களின் செயல்பாடுகள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்த சம்பவம் ஒரு சான்றாகும்.

குற்றத் தடுப்பு பணியைத் தங்களின் கடமையாகக் கொண்டுள்ள காவல்துறையினரே திருட்டு, மோசடி, போதைப் பொருள் கடத்தல், பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு, சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொண்டுவரும் சூழல், பொதுமக்கள் காவல்துறை மீது கொண்டுள்ள நம்பிக்கையை இழக்கச் செய்வதைக் காணமுடிகிறது.

தமிழ்நாடு காவல்துறையை மேம்படுத்துவதற்காக நான்காவது காவல் ஆணையத்தை ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் கடந்த ஜனவரி மாதத்தில் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

மனித உரிமைகள், சட்ட விழிப்புணர்வு உள்ளிட்டவை மிகுந்து காணப்படும் நிகழ்கால சமுதாயத்தில் காவல்துறையின் பணிகள், பொதுமக்கள்-காவலர்கள் நல்லுணர்வை மேம்படுத்துதல், காவல்துறையை நவீனமாயமாக்குதல், காவலர்கள் நலன் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யும் பெரும்பணியை நான்காவது காவல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்பது பேச்சளவில் நின்றுவிடாமல், காவல்துறை செயல்படுவதற்கான வழிமுறைகளை நான்காவது காவல் ஆணையம் பரிந்துரை செய்யும் என்கிற பொதுமக்களின் நம்பிக்கை வீண்போகாது என்று நம்புவோம்!

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

***

(23.02.2022-ஆம் தேதிய தினமணி நாளிதழில் வெளியான கட்டுரை)

Previous post திசைமாறிச் செல்லும் சிறார்கள்!
Next post முதியோர் எதிர்கொள்ளும் குற்ற நிகழ்வுகள்!

2 thoughts on “நான்காவது காவல் ஆணையத்தை நம்புவோம்!

  1. ஐயா வணக்கம்
    நல்ல பதிவு புரிந்துகொள்ளும் படி உள்ளது.
    சில நேரங்களில் எல்லாம் ஆவணங்கள் வைத்திருந்தும் தலை கவசம் அணிந்தும் இரண்டு சக்கர வாகனங்களில் செல்லும் போது காவலர் சோதனைக்கு பிறகும் சில காவலர்கள் பணம் கேட்கிறார்கள். அவர்களிடம். ஏன் பணம் கேட்கிறீர்கள் என்று கேட்டால் 100 ற்கு மேற்பட்ட வழக்குகள் போடமுடியும் என்று சொல்லுகிறார்கள் உண்மை ஐயா
    சிறந்த காவலர்கள் தேர்வு செய்வதிலும் லஞ்சம் கொடுக்க படுகிறது அரசியல் தலையீடு இதை நினைக்கும் பொழுது வேதனையாக உள்ளது.

  2. மிகவும் முக்கியமான அடிப்படையான விஷயங்களைப் பற்றிய கட்டுரையாக இதை நான் பார்க்கிறேன். ‘அடிப்படை நேர்மை’ என்பது தற்போது மனிதர்களின் வாழ்வில் குறைந்து வருகிறது. பணத்துக்காக சட்டத்துக்குப் புறம்பாகவும் நியாயமின்றியும் செயல்படும் தன்மை காவல்துறையில் மிகவும் அதிகமாகிவிட்டது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. லஞ்சம் பெறாமல் இருந்தாலும் கொடுக்கப்பட்ட பணியைச் சரிவர நிறைவேற்றாமல் இருப்பதும் குற்றம் தான்.நேர்மை,துணிவு,பணித்திறன்.. மிகவும் குறைந்துள்ளது. பிரச்சினை இல்லாமல் இருந்தால் போதும் என்ற மனப்பான்மை உயரதிகாரிகளிடையே வந்துவிட்ட நிலையில் கீழ்நிலை காவலர்கள் எந்த அளவுக்கு செயல்படுவார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. காவல்துறையை சீரமைப்பது என்பது மிகவும் சவாலான செயல் தான். ஏதாவது நல்லது நடந்தால் மிகவும் நன்றாக இருக்கும் 🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *