சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லியில் அமைந்துள்ள ‘குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றம்’ அண்மையில் ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் 2019-ஆம் ஆண்டில் நிகழ்ந்த இந்தக் கொலை வழக்கில் முதியவர்களான கணவனும், மனைவியும் ஒரு நாள் இரவில் தங்களது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின்சாரக் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தனர் என்ற புகார் காவல் நிலையத்தில் பதிவானது.

இந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட புலன் விசாரணையில், மின்சாரக் கசிவு காரணமாக அந்த தம்பதி மரணம் அடையவில்லை என்றும், தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன என்றும் தெரியவந்தது. இக்கொடிய செயலை இறந்த தம்பதியின் மூத்த மகனும், மருமகளும் செய்துள்ளனர் என்றும், தந்தைக்கும், மகனுக்கு இடையே நிலவிவந்த குடும்பப் பிரச்சினை காரணமாக இக்கொலை நிகழ்ந்துள்ளது என்றும் துப்பு துலங்கியது.

குடும்ப பிரச்சினை காரணமாக நிகழ்ந்த குற்ற நிகழ்வு என இச்சம்பத்தைப் புறந்தள்ளிவிடாமல், நிகழ்காலத்தில் ‘மூத்த குடிமக்கள்’ எதிர்கொள்ளும் குற்ற நிகழ்வுகளில் ஒன்றாகத்தான் இக்கொலை சம்பவத்தைப் பார்க்க வேண்டிய சூழல் தற்பொழுது ஏற்பட்டுள்ளது.

கொலை, கொலைமுயற்சி, பாலியல் வன்கொடுமை, வழிப்பறி, மோசடி போன்ற கொடுங்குற்றங்களுக்கு இரையாகும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு நம்நாட்டில் அதிகரித்துவரும் துர்பாக்கியநிலை வேதனைக்குரியது.

தங்களுக்கு இழைக்கப்படும் குற்றங்கள் குறித்து வெளிப்படையாக புகார் கொடுக்க முடியாத நிலையில் மூத்த குடிமக்களில் சிலர் இருந்து வருகின்றனர். அதே சமயம், காவல் நிலையங்களில் அவர்கள் கொடுக்கும் பல புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் புறக்கணிக்கப்படுவதும் உண்டு. அதன் விளைவாக, மூத்த குடிமக்கள் பாலியல் வன்கொடுமை, உயிரிழப்பு, பொருள் இழப்பு போன்றவற்றை எதிர்கொண்ட சம்பவங்களும் உண்டு.

ஆள் மாறாட்டம் காரணமாகவும், போலி கையெழுத்து மூலமும் மூத்த குடிமக்கள் பலர் தங்களின் அசையா சொத்துகளைப் பறிகொடுத்த சம்பவங்கள் பல உண்டு. இம்மாதிரியான நில மோசடி புகார்கள் பல நேரங்களில் ‘சிவில் வழக்குகள்’ என காவல்துறையினரால் புறக்கணிக்கப்படுவதும் உண்டு. பதிவு செய்யப்பட்ட நிலமோசடி வழக்குகளிலும் தீர்வு கிடைக்காமல் தவிக்கும் மூத்த குடிமக்கள் பலர் உள்ளனர்.

மூத்த குடிமக்கள் அதிகமான குற்ற நிகழ்வுகளை எதிர்கொள்ளும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பது, மூத்த குடிமக்களின் நலனில் நம்நாடு அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

இந்தியாவில் கொலைக் குற்றத்திற்குப் பலியான மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 2018-இல் 986-ஆக இருந்தது. அது 2020-இல் 1,200-ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 2018-இல் 152-ஆக இருந்தது. 2020-இல் 183-ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொலைக் குற்ற நிகழ்வுகளால் ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையிலான மூத்த குடிமக்கள் உயிர் இழந்துவரும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலாவது அல்லது இரண்டாவது இடத்தை 2018-2020 ஆண்டுகளில் பெற்றிருப்பது, மூத்த குடிமக்களை இரக்கமின்றி கொலை செய்யும் குணம் தமிழ்நாட்டில் நிலவுவதை வெளிப்படுத்துகிறது.

ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையிலான கொலை முயற்சி தாக்குதல்களை எதிர்கொண்டுவரும் மூத்த குடிமக்களைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 2018-2020 ஆண்டுகளில் முதலாவது அல்லது இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பதும் வேதனைக்குரியதாகும்.

2018, 2019, 2020 ஆகிய மூன்று ஆண்டுகளில் முறையே 182, 190, 161 வழிப்பறிகள் தமிழ்நாட்டில் மூத்த குடிமக்களிடம் நடத்தப்பட்டுள்ளன. பிற மாநிலங்களைக் காட்டிலும் மூத்த குடிமக்களிடம் வழிப்பறி செய்யப்படும் குற்ற நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலாவது அல்லது இரண்டாவது இடத்தை வகிக்கிறது.

அறுபது வயதைக் கடந்த மூத்த குடிமக்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிவரும் துயரம் நம் நாட்டில் தொடர்ந்து நிகழ்கிறது. இவ்வகையான குற்றங்கள் 2020-ஆம் ஆண்டில் அதிக அளவில் நிகழ்ந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பெற்றிருப்பது நமது மாநில கலாச்சார சீரழிவை வெளிப்படுத்துகிறது.

மூத்த குடிமக்களைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தப்படும் கொலை, கொலை முயற்சி குற்றங்கள் அதிக அளவில் நடைபெறும் இந்தியப் பெருநகரங்களின் பட்டியலில் சென்னை பெருநகரம் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து முதலாவது அல்லது இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது.

மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களைக் காட்டிலும் சென்னை பெருநகரத்தில் அதிக எண்ணிக்கையிலான கொலை, கொலை முயற்சி குற்றங்கள் மூத்த குடிமக்கள் மீது நிகழ்த்தப்படுவதும், இந்திய அளவில் அதிகமான குற்றங்களை மூத்த குடிமக்கள் எதிர்கொள்ளும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது இடம் பிடித்திருப்பதும் மூத்த குடிமக்கள் தமிழ்நாட்டில எதிர்கொண்டுவரும் வாழ்வியல் துயரத்தை வெளிப்படுத்துகின்றன.

வயது மூப்பு காரணமாக ஏற்படும் நோய்களால் வரும் வேதனை ஒரு பக்கம் இருக்க, கொடுங்குற்ற நிகழ்வுகளும் மூத்த குடிமக்களைத் தொடர்ந்து தாக்கிவருவது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு சில சமூகக் காரணங்களைக் கண்டறிந்துள்ளது.

ஓய்வூதியம் பெற்றுவரும் மூத்த குடிமக்களில் ஒரு சாரார் தங்களின் குழந்தைகள், உறவினர்களிடம் இருந்து விலகி, தனியாக வாழ்ந்துவரும் நிலை தற்பொழுது அதிகரித்து வருகிறது. தினசரி தேவைகளுக்கு அறிமுகம் இல்லாத நபர்களின் உதவியை நாட வேண்டிய கட்டாய சூழலில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய வாழ்க்கைமுறை கொடுங்குற்ற நிகழ்வுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழலை அவர்களுக்கு ஏற்படுத்திவிடுகிறது.

மூத்த குடிமக்கள் காவல் நிலையங்களில் கொடுக்கும் புகார்களின் உண்மை தன்மையை அறிந்து கொள்ளாமல், அப்புகார்கள் புறக்கணிக்கப்படும் நடைமுறை காவல் நிலையங்களில்; தொடர்ந்து நிகழ்கிறது. புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் புறக்கணிக்கப்படும் மூத்த குடிமக்களின் ஒவ்வொரு புகாரும், மற்றொரு குற்றத்தை மூத்த குடிமக்கள் மீது நிகழ்த்துவதற்கான வாய்ப்பை குற்றவாளிக்குக் கொடுக்கிறது.

மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் புலன் விசாரணையும், அதைத் தொடர்ந்து நடைபெறும் நீதிமன்ற விசாரணையும் துரிதமாக நடைபெறாத நிலையை பல வழக்குகளில் காணமுடிகிறது. பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்கள் சார்பாக அவ்வழக்குகளின் முன்னேற்றத்தைக் கண்காணித்து, விரைவுபடுத்த யாரும் இல்லாத சூழலே இதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது.

ஆதாயக் கொலை, வழிப்பறி, திருட்டு போன்ற குற்றங்களை மூத்த குடிமக்களிடம் நிகழ்த்துவது எளிதானது மட்டுமல்ல் பாதுகாப்பானது என்ற உணர்வு கைதேர்ந்த குற்றவாளிகள் பலரிடம் நிலவுகிறது என்பதைக் களஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு குழந்தைகளின் ஆரோக்கியமும், வளர்ப்பு முறையும், தரமான கல்வியும் இன்றியமையாதவை. அதே போன்று, ஒரு நாட்டின் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் பெரும்பணியை மூத்த குடிமக்களே செய்து வருகின்றனர்.

‘ஒரு சமுதாயத்தில் மூத்த குடிமக்கள் பேணப்படும் விதத்தைப் பொறுத்துதான், அந்த சமுதாயத்தின் தரத்தை அளவிடமுடியும்’ என உலக சுகாதார நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அறுபது வயதிற்கு மேற்பட்ட அனைவரும் மூத்த குடிமக்களாகக் கருதப்படுகின்றனர். இந்த வயது வரம்பு பிரான்ஸ், இத்தாலி, நார்வே போன்ற நாடுகளில் 67-ஆகவும், இங்கிலாந்தில் 66-ஆகவும், ஜெர்மனி, ஸ்பெயின், பின்லாந்து போன்ற நாடுகளில் 65-ஆகவும் நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்தியாவில் 2011-ஆம் ஆண்;டு 10.4 கோடியாக இருந்த மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 2021-ஆம் ஆண்டில் 13.8 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2031-ம் ஆண்டில் 19.4 கோடியாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மூத்த குடிமக்களைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் கேரளம் முதலிடத்தையும், தமிழ்நாடு இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூத்த குடிமக்களின் நலனுக்காக ஓய்வூதியம், மருத்துவம், பயணக் கட்டணச் சலுகை, வரிச் சலுகை என பல்வேறு சலுகைகளை அரசு வழங்கிய பின்னரும், வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காகவும், வீட்டுக்காகவும் உழைத்த மூத்த குடிமக்கள் சிலரின் இறுதி நாட்கள் வறுமையிலும், பராமரிப்பவர் யாருமன்றி சாலைகளிலும் கழியும் அவல நிலையைக் காண நேரிடுகிறது.

மூத்த குடிமக்களை புறக்கணிக்கப்பட்டவர்களாகக் கருதாமல், அவர்களின் நலன் குறித்து தொடர் நடவடிக்கை எடுக்க ‘முதியோர் நல மேம்பாட்டுத் துறை’ ஒன்றை உருவாக்க வேண்டியதின் அவசியம் குறித்து அரசு சிந்திக்க வேண்டிய தருணம் இது.

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

***

(11.03.2022-ஆம் தேதிய தினமணி நாளிதழில் வெளியான கட்டுரை)

4 thought on “முதியோர் எதிர்கொள்ளும் குற்ற நிகழ்வுகள்!”
  1. 3 வயது பெண் குழந்தைகள், வயது வந்த பெண்கள் மீது தொ டுக்கப்படும் பாலியல் வன்முறை தொடர்ந்து வயதான பெரியர் கள் மீதும் நடக்கும் வன்முறை கள் பற்றி பார்க்கும்போது நமது கலாச்சாறம் சீரழிவை நோக்கி செல்கிறது என்பது உண்மை.
    இதை எப்படி தடுக்க வேண்டும் என்று அரசும் காவல் துறையும் தக்க நடடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் வயதானவர்கள் ஒரு பய உணர்வோடு எஞ்சிய நாட்களில் வாழும் சூழ் நிலை ஏற்பட்டு விடும். குற்ற வாளிகள் மீது இரும்பு கரம் கொண்டு கடுமையான தண்டணை வழங்க வேண்டும்.

  2. வணக்கம் அய்யா
    நல்ல தகவல்
    எங்கள் ஊர் அருகே உள்ள முதியோர் இல்லத்திற்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை செல்வேன் என்னால் முடிந்த உதவி செய்வேன்
    அவரிகளிடம் பேசுவேன் அப்போது சொன்னார்கள் மகன் மகள்கள் கவனிக்க மாட்டார்கள் இங்கு கொண்டு வந்து விடுகிறார்கள்
    முதியோர்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
    செந்தில் முருகன்
    சமூக ஆர்வலர்
    நாமக்கல் மாவட்டம்
    . S.செந்தில் முருகன் ,
    சமூக ஆர்வலர், துத்திகுளம், நாமக்கல் மாவட்டம்.

  3. சுமார் 30 வருடங்களுக்கு முன்பு வரை வீட்டில் வயதானவர்கள் இருந்தால் அவர்களுக்குத் தனி மரியாதை இருந்தது. குறைந்த பட்சம் அவர்களுக்கு நல்ல உணவு மற்றும் மதிப்பு கொடுக்கப்பட்டது.
    தற்போதைய கல்வி முறையும் பணம் சார்ந்த வாழ்க்கையும் மனிதர்களிடம் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதை தெளிவாக உணர முடிகிறது. நமது கல்வி முறையில் அடிப்படையான வாழ்க்கைக் கல்வி, பண்பு, ஒழுக்கம்.. போன்ற விஷயங்கள் சுத்தமாக இல்லை. மேலும் கூட்டுக் குடும்ப சூழல் இருந்த போது இயல்பாகவே மனிதர்களிடம் விட்டுக் கொடுத்து வாழும் பழக்கம் இருந்தது. பணம் தான் பிரதானம் என்ற எண்ணமும் நேர்மையற்ற வகையில் பணம் சம்பாதிக்கும் வழக்கமும் மிகுந்து காணப்படுகிறது. அது சாமார்த்தியமாகவும் கருதப்படுகிறது.
    இதற்கு இன்றைய அரசியல் சூழலும் முக்கிய காரணியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. குறுக்கு வழியிலான வளர்ச்சி,ஓட்டுக்குப் பணம், அதிகாரம் நோக்கிய செயல்பாடுகள்,.. போன்றவை மிகவும் மோசமான தவறான வழிகாட்டுதல்கள் ஆகிவிட்டன.
    அரசு நேர்மையாகச் செயல்படும் பட்சத்தில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதே நேரத்தில் தன்னிலை மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *