அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் ‘குற்ற நிகழ்வுகளைக் குறைப்பதைக் காட்டிலும், குற்றங்களே நடைபெறாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். ‘குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதால், புதிய நீதிமன்றங்கள் திறக்கப்படுகின்றன’ என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் சமீபத்தில் கூறினார்.

நாட்டில் குற்ற நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதன் தாக்கத்தைக் குறைப்பதற்காக குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டும் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. அதிகரித்துவரும் குற்றங்களைக் காரணம்காட்டி, புதிய காவல் நிலையங்களையும், புதிய நீதிமன்றங்களையும் திறப்பதன் மூலம் குற்றங்கள் நிகழாத சூழலை உருவாக்கவோ, குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கையைக் குறைக்கவோ முடியுமா?

வேலைவாய்ப்பின்மை, வறுமை உள்ளிட்ட காரணங்களால் நிகழும் குற்றங்களைக் காட்டிலும், தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு, பழி வாங்கும் குணம், முறையற்ற வழிகளில் பொருள் ஈட்டுதல் போன்ற காரணங்களால் நிகழும் குற்றச் செயல்களே அதிகம் என்பதைப் புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன. குற்ற வழக்குகள் மீதான புலன் விசாரணையைச் சரிகட்டிவிடலாம் என்ற தைரியமும், நீதிமன்ற விசாரணையைச் சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கையும் குற்றம் புரிபவர்களிடம் இருக்கும்வரை குற்றங்களின் எண்ணிக்கை சமுதாயத்தில் குறைய வாய்ப்பில்லை.

அதிகரித்துவரும் குற்ற நிகழ்வுகளைக் கணிசமாகக் குறைக்க புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமா? காவலர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டுமா? அதிகமான நபர்களை என்கவுன்டர் செய்ய வேண்டுமா? காவல்துறை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்தான்; என்ன?

இந்தியாவில் தற்;பொழுது நடைமுறையில் இருந்துவரும் காவல் அமைப்பின் முதுகெலும்பாக இருந்துவருவது ஆங்கிலேயர்கள் 1861-ஆம் ஆண்டில் இயற்றிய ‘காவல் சட்டம்’ ஆகும்.

இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் என்று குறிப்பிடப்படும் 1857-ஆம் ஆண்டின் சிப்பாய் கலகம் ஆங்கிலேய அரசாங்கத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குத் துணைபுரியும் வகையில் காவல் அமைப்பு ஒன்றினை இந்தியாவில் உருவாக்க வேண்டியதின் அவசியத்தை சிப்பாய் கலகம் ஆங்கிலேயர்களுக்கு உணர்த்தியது. அதன் விளைவாகத்தான் ஆங்கிலேய அரசாங்கம் 1861- ஆம் ஆண்டில் இந்தியாவிற்கான காவல் சட்டத்தை இயற்றி, காவல்துறை என்ற அமைப்பை ஏற்படுத்தியது.

சட்டம்-ஒழுங்கைப் பராமரித்தல், குற்றங்கள் நிகழாமல் கண்காணித்தல், நிகழ்ந்த குற்றங்களைத் துப்பறிந்து கண்டுபிடித்தல் போன்ற பணிகளைக் காவல்துறை செய்துவந்தாலும், இந்தியாவை ஆட்சி செய்துவந்த ஆங்கிலேய அரசாங்கத்திற்கு எதிராகவும்இ இந்தியாவின் விடுதலைக்கு ஆதரவாகவும் குரல் கொடுப்பவர்களை நசுக்கி, ஒடுக்குவதுதான் காவல்துறையின் முக்கிய கடமையாக இருந்து வந்தது.

நீதிமன்ற விசாரணையின்றி யாரை வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம் என்ற அதிகாரத்தை 1919-ஆம் ஆண்டைய சட்டத்தின்படி ஆங்கிலேய அரசாங்கம் உயர் காவல் அதிகாரிகளுக்கு வழங்கியது. உடல் வலிமை மிக்கவர்களாகவும், உயரதிகாரிகளின் ஆணைகளுக்கு கீழ்படிந்து நடப்பவர்களாகவும் இருந்தவர்கள் காவல் நிலையங்களில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். 24 மணி நேரமும் பணிபுரிந்த அவர்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கப்பட்டது.

வழக்கு பதிவு செய்தல், சந்தேகப்படும் இடங்களில் சோதனையிடுதல், பொருட்களைக் கைப்பற்றுதல், கைது செய்து சிறையில் அடைத்தல் உள்ளிட்ட அதிகாரங்கள் காவல் நிலையத்தில் பணிபுரிபவர்களிடம் குவிந்திருந்தன. இதனால் கையூட்டு பெறும் பழக்கம் காவல் நிலையங்களில் பணிபுரியும் களப்பணியாளர்களிடம் மிகுந்து காணப்பட்டது. இதை 1902-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் அமைத்த காவல் ஆணையமும் உறுதி செய்துள்ளது.

இந்தியா விடுதலை அடைந்த பின்னரும், காலனித்துவ மனப்பான்மை காவல்துறையின் செயல்பாடுகளில் நிலவி வருவதும், ஆங்கிலேய அரசாங்கத்திற்குப் பதிலாக மாநிலங்களில் ஆட்சி பொறுப்பில் இருப்பவர்களின் மனப்பாங்கறிந்து செயல்படுவதும் காவல்துறையில் தொடர்ந்து நிலவிவருகிறது.

மக்களாட்சி முறைக்கு இந்தியா மாறிவிட்ட பின்னரும், குடிமக்களின் நலனைப் பாதுகாப்பதே காவல்துறையின் முக்கிய கடமை என்பதை உறுதிபடுத்தும் வகையில் காவல் சட்டம் முழுமையாக மாற்றியமைக்காமல்,  தேவைக்கேற்ப சிற்சில திருத்தங்களுடன் ஆங்கிலேயார்கள் இயற்றிய ‘காவல் சட்டம்-1861’  தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது.

வழக்குகள் பதிவு, குற்றவாளிகள் கைது போன்றவைகளைக் காரணம் காட்டி கையூட்டு பெறுவதும், சூதாட்டம், பாலியல் தொழில், போதைப் பொருட்கள் விற்பனை, கள்ளக் கடத்தல் போன்ற சட்டத்திற்கு முரணான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு கையூட்டு பெறுவதும் விடுதலையடைந்த இந்தியாவில் களப்பணியாற்றும் காவல்துறையினரிடம் தொடர்கின்றன.

காவல் நிலையங்களில் களப்பணியில் ஈடுபடுபவர்களிடம் நிலவிவந்த கையூட்டு கலாச்சாரம், சுதந்திர இந்தியாவில் காவல் உயர் அதிகாரிகள்வரை பரவிய நிலையைக் காணமுடிகிறது. காவல் அதிகாரிகளின் பணியிடமாற்றம், பதவி உயர்வு உள்ளிட்ட நிர்வாக நடைமுறைகளை கவனிக்க உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, காவல்துறை உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய ‘காவல் நிர்வாக வாரியம்’ அமைக்கப்பட்டு இருந்தாலும், அந்த வாரியத்தின் செயல்பாடுகளை பெரும்பாலும் அரசியல் பிரமுகர்களின் பரிந்துரைகளும், கையூட்டுமே தீர்மானிக்கின்றன.

‘அரசுத் துறைகள் பலவற்றில் கையூட்டு பரவலாக இருந்து வரும்பொழுது, காவல்துறையின் கையூட்டு சம்பவங்களை மட்டும் ஏன் பெரிதுபடுத்துகிறார்கள்?’ என்று முணுமுணுக்கும் காவல்துறையினர், சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பு தங்களுடையது என்பதைக் கருத்;தில் கொள்வதில்லை. கையூட்டு கலாச்சாரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை வேகப்படுத்துவதுதான், குற்ற நிகழ்வுகளை கணிசமாக குறைக்கும் வழிமுறைகளில் முதன்மையானது என ‘இந்திய காவல்துறை சீர்திருத்தங்கள்’ குறித்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

அதிகமான தமிழர்கள் வசித்துவரும் சிங்கப்பூர், முதலில் ஆங்கிலேய காலனி நாடாக இருந்த போதும், பின்னர் இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் ஆளுமையின் கீழ் இருந்த போதும் அங்கு காவல்துறையால் கையூட்டு கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 1960-களில் சிங்கப்பூரில் நிகழ்ந்த அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து, கையூட்டுக்கு எதிரான சட்ட ரீதியான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. அதன் விளைவாக சிங்கப்பூரில் குற்றங்கள் கணிசமாகக் குறைந்தன.

இந்தியாவில் கையூட்டு பெற்ற குற்றத்திற்காக 2018, 2019, 2020-ஆகிய ஆண்டுகளில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முறையே 4,129, 4,243, 3,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மூன்று ஆண்டுகளில் முறையே 1,074, 928, 369 வழக்குகள் தண்டனையில் முடிவடைந்துள்ளன. கரோனா பெருந்தொற்று காரணமாக 2020-ஆம் ஆண்டில் வழக்குகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

தமிழ்நாட்டில் இந்த மூன்று ஆண்டுகளில் ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி முறையே 264, 418, 363 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாண்டுகளில் முறையே 110, 93, 62 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் தண்டனையில் முடிவடைந்துள்ளன.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்களின்படி 2020-ஆம் ஆண்டின் இறுதியில் இந்திய நீதிமன்றங்களில் ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட 25,819 வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளன. இந்த வழக்குகள் மீதான நீதிமன்ற விசாரணை முடிவடைய குறைந்தது 25 ஆண்டுகள் ஆகும் என்ற கணிப்பு, இந்திய நாட்டின் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பலவீனத்தையும், இயலாமையையும் வெளிப்படுத்துகிறது.

காவல்துறையினர் வாங்கும் ஒவ்வொரு கையூட்டும் மேலும் பல குற்றங்கள் நடைபெற துணைபுரிவதோடு, தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் மன தைரியத்தையும் குற்றவாளிகளுக்குக் கொடுகிறது. காவல்துறையின் பல்வேறு நிலைகளில் நிலவிவரும் கையூட்டு கலாச்சாரத்தைத் தடுத்து நிறுத்த எடுக்கும் நடவடிக்கைகள்தான் குற்றங்களைக் குறைக்க மேற்கொள்ளும் முயற்சிகளில் முதன்மையானது.

நவீன புலனாய்வு முறைகள்இ தெளிவான சட்ட அறிவுஇ நீதிமன்ற வழக்குகள் விசாரணையில் கவனம் செலுத்துதல் போன்றவையும் குற்ற நிகழ்வுகளை கணிசமாகக் குறைக்கத் துணைபுரியும். நீதிமன்றங்களில் விசாரணைக்காக தேங்கிக் கிடக்கும் வழக்குகள், குற்றவாளிகள் குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதற்கான துணிவைக் கொடுக்கின்றன. வழக்கு விசாரணையை துரிதப்படுத்தாமல், என்கவுன்டர் போன்ற செயல்களில் ஈடுபடுவது பிரச்சனையைத் திசை திருப்பும் செயலாகும்.

ஒரு வழக்கு பதிவு செய்வதில் தொடங்கி, அந்த வழக்கில் நீதிமன்ற விசாரணை முடியும் வரை காவல்துறையினர் பல்வேறு காரணங்களுக்காக பணம் செலவளிக்க வேண்டிய கட்டாய சூழல் நடைமுறையில் இருந்து வருகிறது.

இத்தகைய செலவினங்கள் குறித்து காவல்துறை முழுமையான ஆய்வு மேற்கொண்டு, அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றால், களப்பணியாற்றும் காவலர்கள் எதிர்கொள்ளும் தேவையற்ற செலவினங்களுக்குத் தீர்வு கிடைக்கும்; நீண்ட காலமாக நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளும் விரைவில் முடிவுக்கு வரும்.

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

***

(24.03.2022-ஆம் தேதிய தினமணி நாளிதழில் வெளியான கட்டுரை)

Previous post முதியோர் எதிர்கொள்ளும் குற்ற நிகழ்வுகள்!
Next post சீர்திருத்தத்துக்கான நேரம் இதுவே!

2 thoughts on “குற்ற நிகழ்வுகள்: குறைத்தலும் தவிர்த்தலும்!

  1. தற்போது உள்ள துர் பாக்கிய நிலையை தெளிவாக உணர்த்தும் வகையில் உள்ளது.
    இதை விட மிகுந்த கவலை அளிக்கும் விதமாக தினமும் நாளித்களிலும் வரும் பள்ளி மாணவர் களின் போதை வஸ்துக்கள் பயன்பாடு பாலியல் வன்முறை செயல்கள்.
    எப்படி தடுக்க போகிறோம் !
    சட்டத்தின் கடுமையான தண்டணை மூலமாகவா / ஒழுக்க நெறி வகுப்புக்கள் மூலமாகவா? இதில் உடன் கவனம் செலுத்த வேண்டும்.

  2. நல்ல பல தகவல்கள்.
    பொதுவாக தண்டனை கடுமையாக இருக்கும் போது குற்றங்கள் குறைவாக இருக்கும் என்று சொல்வதுண்டு. ஆனால் பல காரணங்களினால் பெரும்பாலான வழக்குகள் தகுந்த நேரத்தில் விசாரணை முடிக்கப்படுவதில்லை. நீதிமன்றங்களிலும் இது தான் நிலை. தரமான விசாரணைகள் மிகவும் குறைந்து போயுள்ளது.
    காவல்துறையில் பணியாற்றும் காவல்துறையினரை முதலில் நேர்மையாகச் செயல்பட வைக்க வேண்டியது மிகவும் அவசியம். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கியமானது என்று நம்புகிறேன்.
    அடுத்து தேவையான அளவுக்கு காவலர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். தற்போது பணிச்சுமை பெரிய அளவில் உள்ளது.
    சில வகையான குற்றங்கள் குறையும் போது வேறு விதமான குற்றங்கள் அதிகரிக்கின்றன. போதைப் பழக்கமும் , ஒழுக்கம் குறைவான செயல்பாடுகளும் மலிந்து போன நிலையில் குற்றங்கள் நடவாமல் தடுப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. குற்றம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளும் தொடர் கண்காணிப்புகளும் மட்டுமே குற்றங்களைக் குறைக்க உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *