பணியிடைப் பயிற்சியும், பணித்திறன் மேம்பாடும்!

உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியாவில், வாழ்வாதார கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் நடத்தும் போராட்டங்களை ஒடுக்க, போராட்டக்காரர்கள் மீது நடத்தப்படும் துப்பாக்கிச் சூட்டால் ஏற்படும் மரணங்களையும், காவல் மரணங்களையும் காவல் நிர்வாகத்தின் அத்துமீறல்களாக மட்டும் பொதுமக்கள் பார்ப்பதில்iல் அரசாங்கத்தின் அடக்குமுறையாகவும் பார்க்கின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தக்கூடிய சூழல் ஏற்படாத வகையில் போராட்டங்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள் திட்டமிடப்பட வேண்டும் என்றும், காவல் மரணங்கள் நிகழாமல் காவல் நிலையங்களில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அரசாங்கமும், காவல் தலைமையகமும் தொடர்ந்து அறிவுரைகளும், வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கியுள்ள நிலையிலும், இம்மாதிரியான அசம்பாவிதங்கள் தொடர்கின்றன.

காவல் மரணங்களும், போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கிச் சூடும் தவிர்க்க முடியாதவையா? என்ற கேள்வி பொதுவெளியில் எழுந்துள்ளது. கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், காவல் மரணங்களில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட சம்பவங்களில் குறிப்பிடத்தக்கவை 2018-ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடும், 2020-ஆம் ஆண்டில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நிகழ்ந்த காவல் மரணங்களும் ஆகும்.

அரசு சொத்துகளைத் தீயிட்டு, சேதப்படுத்தும் போராட்டக்காரர்களின் வன்முறைச் செயல்களைக் கட்டுப்படுத்தவும், சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும் கலவரக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரம் காவல்துறைக்கு உண்டு. அந்த நேரத்தில் கலவரக்காரர்கள் சிலர் உயிர் இழப்பதும் உண்டு.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரில் பலருக்கு துப்பாக்கி குண்டுகள் முதுகைத் துளைத்து, மார்பு வழியாக வெளிவந்துள்ளன என்றும், குறிப்பாக மாணவி ஒருவருக்கு தலையின் பின்புறத்தில் குண்டு துளைத்து, வாய் வழியாக வெளிவந்துள்ளது என்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து, வன்முறையில் ஈடுபடும் கலவரக்காரர்களைக் கலைக்க ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தும், தடியடி, கண்ணீர்ப்புகை, தண்ணீர் பீய்ச்சி அடித்தல் போன்றவைகளைப் பயன்படுத்தியும், கலவரக்காரர்கள் கலைந்து செல்லாவிட்டால், சம்பவ இடத்தில் இருக்கும் உயரதிகாரியின் அனுமதி பெற்று துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான வழிமுறைகளை ‘கவாத்து-பயிற்சி கையேடு’ தெளிவுபடுத்துகிறது.

‘கலவரக்காரர்களைக் கலைக்க நடத்தப்படும் துப்பாக்கிச் சூட்டில், கலவரத்தில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு, இடுப்புக்கு கீழ்பகுதியில் குண்டுபடும்படி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட வேண்டும்’ என அந்த கையேடு தெளிவுபடுத்துகிறது.

தூத்துக்குடியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் பலரின் முதுகில் குண்டுகள் துளைத்து, மார்பில் வெளிவந்துள்ளன என்ற தகவல், அவர்கள் அனைவரும் பயந்து ஓடும் பொழுது, முதுகில் குண்டுகள் பாய்ந்து இறந்துள்ளனர் என்ற கள நிலவரத்தை உணர்த்துகிறது. சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும், கலவரத்;தை ஒடுக்கவும் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக் காரணம் என்ன?

‘கலவரக் கும்பலைக் கலைக்கும் நடவடிக்கைகள்’ குறித்த பயிற்சி மாதம் தோறும் காவலர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. காவலர்களின் கவாத்து செய்முறைகளை ஆய்வு செய்வதற்காக காவல் உயரதிகாரிகள் வரும்பொழுதெல்லாம், கலவரக் கும்பலைக் கலைக்கும் பயிற்சிக்கு முன்னுரிமை கொடுத்து, உயரதிகாரிகள் முன்னிலையில் அந்த பயிற்சி நடத்தப்படுகின்ற பழக்கம் நடைமுறையில் இருந்து வந்தது.

ஆனால், காவலர்களின் வேலைப்பளுவைக் காரணம் காட்டி, இந்த பயிற்சி தற்பொழுது முறையாக நடத்தப்படுவதில்லை. இதன் முக்கியத்துவத்தை காவல் உயரதிகாரிகளும் உணர்வதில்லை. வன்முறையில் ஈடுபடும் கலவரக்காரர்களை எதிர்கொள்ளும் பயிற்சி போதிய அளவிற்கு இல்லாத காரணத்தால், பாதுகாப்புப் பணியிலிருக்கும் காவலர்கள் கலவரக் கும்பலை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்துகின்ற சம்பவங்கள் தொடர்கின்றன.

அதே போன்று, மனித உரிமை மீறலாகவும், காவல் அத்துமீறலாகவும் கருதப்படும் காவல் மரணங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. காவல் மரணம் நிகழும் பொழுது, மக்களிடம் வெளிப்படும் வெறுப்புணர்வை தணிப்பதற்காக, காவல் மரணங்களைத் தவிர்ப்பதற்கான அறிவுரைகளை அரசும், காவல் தலைமையகமும் வெளியிடுகின்றன. அந்த அறிவுரைகளை காவலர்கள் பின்பற்றுகிறார்களா? என்பது குறித்த கண்காணிப்பில் ஏற்படும் குறைபாடுகள் பல நேரங்களில் காவல் மரணங்களுக்கு வழி வகுக்கின்றன.

வாகன சோதனை, சந்தேக நபர்களிடம் விசாரணை போன்ற நேரங்களில் மூர்க்கத்தனமாக அடித்தால் உண்மை வெளிப்படும் என்றும், அத்தகைய வரம்பு மீறிய செயல்களால் தங்களின் அதிகாரத்தை பொதுமக்களிடத்தில் நிலைநாட்ட முடியும் என்றும் காவல்துறையில் ஒருசாரார் கருதுகின்றனர்.

கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற இக்காலத்தில், சட்டவிதிகளுக்கு உட்பட்டு காவல்துறையினர் செயல்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பும், மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் சட்ட விழிப்புணர்வும் பொதுமக்களிடத்தில் தொடர்ந்து வெளிப்படுவதை காவல்துறையினர் முழுமையாக உணர்ந்து செயல்படாத நிலையைக் காணமுடிகிறது.

காவல் நிலை ஆணைகளும், முப்பெரும் குற்றவியல் சட்டங்களும், காவல் தலைமையகத்தின் சுற்றறிக்கைகளும் காவல்துறையினரை வழிநடத்திச் செல்லும் வழிகாட்டு நெறிகளாகும். இவற்றை காவல்துறையினர் பின்பற்றுவதில் ஏற்படும் குறைபாடுகள் காவல் மரணங்கள், துப்பாக்கிச் சூடு போன்ற அசம்பாவிதங்கள் நிகழக் காரணமாக அமைந்துவிடுகின்றன.

காவலர்களாகத் தேர்வு செய்யப்பட்டு பணியில் சேரும்பொழுது, அவர்களுக்கு காவலர் பயிற்சிப் பள்ளியில் ஆறு மாதகாலம் அடிப்படைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் பிறகு, அவர்களின் பணிக்காலம் முழுவதும் எவ்வித பணியிடைப் பயிற்சியும் இன்றி, பெரும்பாலான காவலர்கள் பணிபுரிந்து வருகின்ற நிலைதான் தற்போதைய காவல்துறையின் கள நிலவரம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில்,   காவல்துறையின் மொத்த எண்ணிக்கையில் 6.4% காவல்துறையினர்தான் கடந்த ஐந்து ஆண்டுகளில் பணியிடைப் பயிற்சி பெற்றவர்கள் எனத் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மூன்று மாவட்டங்களுக்கு ஒரு பணியிடைப் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் காவலர்களுக்கும், களப்பணியாற்றும் காவல் அதிகாரிகளுக்கும் மிகக் குறுகிய கால பணியிடைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இரண்டு காவல் அதிகாரிகளுடன் இயங்கிவரும் இந்த பணியிடைப் பயிற்சி மையத்தினால் அனைத்து காவலர்களுக்கும் பணியிடைப் பயிற்சி வழங்க இயலாத நிலை நிலவுகிறது. இந்த மையங்களின் செயல்திறனை மேம்படுத்துவது குறித்து அரசும், காவல் தலைமையகமும் பரிசீலனை செய்ய வேண்டும்.

காவல் பணியில் புதிதாய் சேர்பவர்களுக்கு அடிப்படைப் பயிற்சி வழங்கும் காவல் பயிற்சி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், காவல் உயா; பயிற்சியகம் (போலீஸ் அகாடமி) போன்றவற்றில் பணிபுரிபவர்கள் பொரும்பாலும் காவல்துறையைச் சார்ந்த அதிகாரிகளே. அவர்களில் பலர் விருப்பமின்றி பணியாற்றி வருகின்ற சூழல் நிலவுகிறது.

கற்றுக் கொடுப்பதில் ஆர்வமும், போதிய அனுபவமும் உள்ளவர்களைத் தேர்வு செய்து, காவல் பயிற்சி மையங்களில் பணியமர்த்தப்பட வேண்டும். காவல் பயிற்;சி மையங்களில் பணிபுரிபவர்களுக்கு சிறப்புப் பயிற்சியும், பிற மாநிலங்களில் அமைந்துள்ள சிறந்த காவல் பயிற்சி மையங்களைப் பார்வையிட்டு, காவல்துறையின் பணித்திறனை மேம்படுத்துவதற்கான சிறந்த வழிமுறைகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும்.

ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேலாக நம்நாட்டில் செயல்பட்டுவரும் காவல்துறையின் உள்கட்டமைப்பில் களப்பணியாற்றும் காவலர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்பயிற்சி அளிக்கும் முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் காவலர்களின் தினசரி வருகைப் பதிவை சரிபார்க்கும் ‘ரோல் கால்’ நேரத்தின் ஒரு பகுதி காவலர்களின் பணி தொடர்பான அறிவுரைகள் வழங்குவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்மை காலமாக இந்த முறை தவிர்க்கப்பட்டு வருகிறது.

மாவட்ட காவல் காண்காணிப்பாளர்கள் நடத்தும் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டங்களும், உயரதிகாரிகளின் காவல் நிலைய ஆய்வுகளும் களப்பணியாற்றும் காவல் அதிகாரிகள், காவலர்களின் பணித்திறனை மேம்படுத்தும் பயிற்சி வகுப்புகளாக இருந்துவந்தன.

களப்பணியின்போது நிகழ்ந்த தவறுகளைச் சுட்டிக்காட்டி, அவை நிகழாமல் பணி செய்வதற்கான வழிமுறைகள் அக்கூட்டங்களில் விவாதிக்கப்பட்டன. சமீப காலமாக, மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டங்களும், காவல் நிலைய ஆய்வுகளும் சம்பிரதாயத்திற்காக நடத்தப்படுகின்ற நிகழ்வுகளாக மாறிவிட்டன.

ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்களை உள்ளடக்கிய தமிழ்நாடு காவல்துறையில் எண்பது சதவீதத்தினர் காவலர்கள். இவர்களில் யாரேனும் ஒருவர் செய்யும் தவறுக்கு காவல்துறையே பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தொடர் கண்காணிப்பும், தவறு செய்பவர்களைக் கண்டறிவதும் காவல் நிர்வாகத்தின் செயல்திறனை மேம்படுத்தத் துணைபுரியும்.

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

(26.04.2022 – ஆம் தேதிய தினமணி நாளிதழில் வெளியான கட்டுரை இது)

Previous post சீர்திருத்தத்துக்கான நேரம் இதுவே!
Next post போதைப் பழக்கமும், குற்ற நிகழ்வுகளும்

3 thoughts on “பணியிடைப் பயிற்சியும், பணித்திறன் மேம்பாடும்!

 1. என்ன நடந்து கொண்டிருக்கிறது அதனை எவ்வாறு சீர்திருத்தலாம் என்பதை விளக்கும் அருமையான கட்டுரை.

 2. காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கு தற்போதைய காலச்சூழலில் தாங்கள் எப்படி பணியாற்ற வேண்டும் என்ற பயிற்சி அவசியமாகத் தெரிகிறது. நேர்மை குறைந்து ஏனோ தானோ என்று செயல்படுவதால் மக்களிடம் நம்பிக்கைக் குறைபாடும் ஏற்பட்டுள்ளது.
  சட்ட அறிவும் புலன் விசாரணை செய்யும் அறிவும் மிகவும் குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. இவை மேம்பட தக்க முயற்சிகள் அவசியமாகின்றன.
  காவலர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி நிலவி வரும் லஞ்ச லாவண்யம் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே காவல்துறை தனது பெருமையைப் பெறும். காவல்துறையினரே இதர சில துறைகளில் பணிபுரிபவர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழலும் உள்ளது.
  காவல்துறை நேர்மையாகப் பணியாற்றும் சூழலை உருவாக்க என்னென்ன செய்ய வேண்டுமோ.. அனைத்தையும் அரசு செய்ய வேண்டும்.

 3. அய்யா வணக்கம்
  மிக அருமையான பதிவு
  இன்னும் காவல்துறையில் காவலர்களுக்கு அதிக மன பயிற்சி கொடுக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *