போதைப் பழக்கமும், குற்ற நிகழ்வுகளும்

கரோனா பெருந்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய அளவில் பொதுமுடக்கம் நடைமுறைப் படுத்தப்பட்டதின் விளைவாகப் பலர் வேலைவாய்ப்பை இழந்து, குடும்ப வாழ்க்கையை நகர்த்திச் செல்லத் தேவையான வருமானம் இன்றிப் பெருந்துயர் அடைந்தனர். ஆனால், அக்காலகட்டத்தில் போதைப் பொருட்களின் வியாபாரம் மட்டும் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு அதிகமாக நடைபெற்றுள்ளது.

போதைப் பொருட்களின் பயன்பாடு – அது தொடர்பான குற்றங்கள் குறித்து அண்மையில் வெளியான ஐக்கிய நாடுகளின் அறிக்கையில், உலக நாடுகளில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் 22% அதிகரித்துள்ளது என்றும், குறிப்பாக கரோனா பெருந்தொற்று பரவல் இருந்த காலகட்டத்தில் ‘கஞ்சா’ என்ற போதைப் பொருளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

12 முதல் 17 வயதுடைய பதின் பருவத்தினர் எளிதில் போதைப் பொருள் பழக்கத்திற்குள் வந்துவிடுகின்றனர் என்றும், அவர்கள் 25 வயது அடையும் போது போதைப் பொருள் பயன்பாட்டுக்கு அடிமையாகிவிடுகின்றனர் என்றும் ஐக்கிய நாடுகளின் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அவர்களில் பலர் ஆரம்பத்தில் கஞ்சாவைப் பயன்படுத்துகின்றனர் என்றும், காலப்போக்கில் மற்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்தப் பழகிக் கொள்கின்றனர் என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் 3.1 கோடி பேர் கஞ்சாவைப் பயன்படுத்துகின்றனர் என்றும், 2.3 கோடி பேர் ஓபியம், ஹெராயின் போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர் என்றும், 8.5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் போதைப் பொருளை ஊசி மூலம் தங்கள் உடலில் செலுத்திக் கொள்ளும் பழக்கம் உடையவர்கள் என்றும் புதுதில்லியில் அமைந்துள்ள போதைப் பொருள் பயன்படுத்துபவர்களுக்கான மருத்துவ மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

நம்நாட்டில் பள்ளிக்கூடங்களில் படித்துவரும் மாணவ, மாணவியர்களில் 18% பேர் போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கம் உடையவர்கள் என்றும், அவர்களில் 80% பேர் மாணவர்கள் என்றும் மற்றொரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

2017 முதல் 2021 வரையிலான (கரோனா காலம் உள்ளிட்ட) ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் விவரங்களை தேசிய போதைப் பொருட்கள் தடுப்புப் பிரிவு அண்மையில் வெளியிட்டுள்ளது. நாடு தழுவிய பொதுமுடக்கம் நடைமுறையில் இருந்த 2020, 2021 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டும் 1,258 டன் கஞ்சா இந்தியாவில் கைப்பற்றப்பட்டுள்ளது என்ற புள்ளிவிபரம் போதைப் பொருட்களின் பயன்பாடு நம்நாட்டில் வேகமாக அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டுகிறது.

இந்த ஐந்தாண்டுகளில் இந்;தியாவில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் அளவு 191% ஆகவும், ஓபியம் என்ற போதைப் பொருளின் அளவு 172% ஆகவும், ஹெராயின் என்ற போதைப் பொருளின் அளவு 339% ஆகவும் உயர்ந்துள்ளன என்ற புள்ளிவிபரம் இந்தியாவில் மிக வேகமாக பரவிவரும் போதைப் பொருட்களின் பயன்பாட்டினை உணர்த்துகிறது.

இந்த சூழலில், தமிழ்நாடு காவல்துறை கடந்த ஐனவரி, ஏப்ரல் மாதங்களில் போதைப் பொருட்களுக்கு எதிரான மாநிலம் தழுவிய சோதனை நடத்தியது. கஞ்சா, குட்கா, ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை காவல்துறையினர் பெருமளவில் கைப்பற்றி, பதினேழு ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இருப்பினும், போதைப் பொருட்களின் விற்பனை தங்குதடையின்றி தமிழகத்தில் தொடர்கின்ற நிலையைக் காணமுடிகிறது.

போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துவரும் உலக நாடுகளின் பட்டியலில் இ;ந்தியா முன்னிலையில் இருந்து வருகிறது. இந்திய மாநிலங்களிலே அதிகமான சாராயம் விற்பனையாகும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதும், இந்தியாவில் விற்பனையாகும் சாராயத்தில் 13% சாராயம் தமிழ்நாட்டில் மட்டும் விற்பனையாவதும், போதைக்கு தமிழ்நாடு அடிமையாகி வருகின்ற நிலையை வெளிப்படுத்துகிறது.

கஞ்சா, ஓபியம், ஹெராயின், சாராயம் போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்தியதின் விளைவாக இந்தியாவில் 2020-ஆம் ஆண்டில் ஒரு மணி நேரத்திற்கு ஒன்று என்று சொல்லும் அளவிற்கு தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன என்றும், 2019-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2020-ஆம் ஆண்டில் போதையின் காரணமாக நிகழ்ந்த தற்கொலைகளின் எண்ணிக்கை 17% அதிகரித்துள்ளது என்றும் தேசிய குற்ற ஆவணக்கூடத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. போதையின் காரணமாக தற்கொலைகள் அதிகமாக நிகழ்ந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு நான்காவது இடம் பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பள்ளிப் பருவத்தில் நட்பு வட்டத்தினர் கொடுக்கும் அழுத்தம், வசிப்பிட சூழல் போன்ற காரணங்களால் போதைப் பழக்கத்தைக் கற்றுக் கொள்ளும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை நம்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில சமயங்களில் பெற்றோரும், கல்வி நிலையங்களும் கொடுக்கும் அழுத்தமும் அவர்களை போதைப் பழக்கத்;தை நோக்கி நகர்த்தி விடுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் சம்பல் நதிக்கரையில் அமைந்துள்ள கோட்டா என்ற நகரில் ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வு, மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வு போன்ற தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் நூற்றுக்கணக்கான தனிப்பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இந்த தனிப்பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர். தனிப்பயிற்சி மையங்கள் கொடுக்கும் அழுத்தம், பெற்றோர்களின் எதிர்பார்ப்பு ஆகியவற்றுக்கு ஈடுகொடுக்க முடியாத மாணவர்கள் போதைப் பழக்கத்தை நாடிச் செல்வதும், அதன் நீட்சியாக தற்கொலை செய்து கொள்வதும் ஆன துர்பாக்கிய நிகழ்வுகள் கோட்டா நகரில் தொடர்கின்றன.

கோட்டா நகரில் 2009-ஆம் ஆண்டில் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை நல்வழிப்படுத்த ஒரே ஒரு போதை மறுவாழ்வு மையம் இயங்கி வந்தது. தற்பொழுது அந்த நகரில் அரசின் அங்கீகாரம் பெற்ற போதை மறுவாழ்வு மையங்கள் ஐந்தும், அனுமதி பெறாத மையங்கள் பலவும் கோட்டா நகரில் இயங்கி வருகின்றன என்ற தகவல் நம்நாட்டு மாணவர்களிடையே அதிகரித்துவரும் போதைப் பழக்கத்தை உணர்த்துகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு தலைநகர் தில்லியில் நடத்திய ஆய்வில் சட்டத்திற்கு முரணாக செயல்பட்டு, சிறார் பராமரிப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறார்களில் 95% பேர் போதைப் பொருட்களைப் பயன்படுத்திய அனுபவம் உள்ளவர்கள் என்பதும், சாலையோரக் குழந்தைகளில் 88% பேர் போதைப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளன. இந்திய பெருநகரங்கள் அனைத்திலும் இம்மாதிரியான சூழல்தான் நிலவி வருகிறது. இத்தகைய சிறார்கள் காலப்போக்கில் சமுதாயத்தை அச்சுறுத்தும் குற்றவாளிகளாக உருமாறிவிடுவார்கள் என்பதில் ஐயமில்லை.

நம் நாட்டில் நடைபெறும் குற்ற நிகழ்வுகளுக்கும், போதைப் பழக்கத்திற்கும் உள்ள தொடர்பு குறித்த ஆய்வு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளிப்படுத்துகிறது. நம் நாட்டில் நிகழும் குற்ற நிகழ்வுகளில் 40% குற்றங்களில் குற்றவாளிகள் மது, போதைப் பொருட்கள் போன்றவற்றின் ஆளுமையில் குற்றங்கள் புரிகின்றனர் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு போதைப் பொருட்கள் விற்பனை செய்வதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ஒரு கும்பல் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு போதையில் சென்று, சிகிச்சையில் இருந்த நபர் ஒருவரை மருத்துவர்கள் முன்னிலையில் கொலை செய்த சம்பவம், அதிகரித்துவரும் போதைப் பழக்கத்தையும், அதன் நீட்சியாக நிகழும் கொடுங்குற்றங்களையும் சுட்டிக்காட்டுகிறது.

அண்மைக் காலத்தில் கொடுங்குற்றங்களில் ஈடுபடும் சிறார்கள் பலர், குற்ற நிகழ்;வின்போது போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கமுடையவர்கள் என்பதும், சென்னை இளைஞர் நீதிக் குழுமத்தின் முன்பு விசாரணையிலுள்ள பல கொடுங்குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட சிறார்கள் போதைப் பழக்கம் உடையவர் என்பதும் கள விசாரணையில் தெரிய வருகிறது.

போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையேயான கள்ள உறவு முற்றுப்பெறாதவரை போதைப் பழக்கமும், அதன் நீட்சியாக நிகழும் கொடுங்குற்றங்களும் தவிர்க்க முடியாதவை.

போதைப் பொருட்கள் தடுப்பு சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டு, இந்தியாவிலுள்ள நீதிமன்றங்களில் 2,72,135 வழக்குகள் 2020-ஆம் ஆண்டில் நிலுவையில் இருந்தன. அவற்றில் 17,780 வழக்குகள் மீதான நீதிமன்ற விசாரணை 2020-ஆம் ஆண்டில் முடிவடைந்தன. மீதமுள்ள 2,54,355 வழக்குகள் மீதான விசாரணை 2021-ஆம் ஆண்டுக்குத் தள்ளி வைக்கப்பட்டது. இந்த வேகத்தில் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றால், நிலுவையில் உள்ள வழக்குகள் மீதான நீதிமன்ற விசாரணை முடிவடைய குறைந்தது 14 ஆண்டுகள் ஆகும். 

போதைப் பொருட்களைக் கடத்துபவர்கள், பதுக்கி வைத்திருப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது பதிவு செய்யப்படும் வழக்குள் மீதான நீதிமன்ற விசாரணை முடிவடைய ஏற்படும் காலதாமதம் போதைப் பொருட்கள் தடுப்பு சட்டம் இ;யற்றப்பட்டதன் நோக்கத்தை அடைவதற்குத் தடையாக இருந்து வருகிறது. நீதிமன்ற விசாரணையின் காலதாமத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து நீதித்துறையும், காவல்துறையும் சிந்திக்க வேண்டியது அசவர அவசியம்.

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

(10.05.2022-ஆம் தேதிய தினமணி நாளிதழில் வெளியான கட்டுரை)

Previous post பணியிடைப் பயிற்சியும், பணித்திறன் மேம்பாடும்!
Next post காவல் மரணங்களுக்கு தீர்வு காண்போம்!

3 thoughts on “போதைப் பழக்கமும், குற்ற நிகழ்வுகளும்

  1. தற்போதைய காலகட்டத்தில் மாணவ ,மாணவிகள் பள்ளி பருவத்திலே போதை வஸ்துக்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை நினைக்கும் போது நெஞ்சம் பதுறுகிறது. கடந்த சில மாதங்களாகவே பள்ளி கல்லூரிகளில் நடந்து வரும் மிக மோசமான செயல்களின் தாக்கம் எந்த அளவுக்கு போதை பொருட்கள் தாராளமாக புழக்கத்தில் உள்ளன என்பது வெட்ட வெளிச்சம்.
    இன்று கூட ஓர் போதை ஆசாமி அப்பாவி நடத்துநர் ஒருவரை கொலை செய்து விட்டார் என்று டிவி மூலம் அறியும் போது,நம் தமிழ் நாடு எந்த அளவிற்கு போதை வஸ்துக்கு அடிமை ஆகி இருக்கிறது என்பது அறிய முடியும்.
    எனவே இன்னும் காலம் தாழ்த்தாமல் நமது மாண்பு மிகு தமிழக முதல்வரும் காவல் துறை தலைவர் அவர்கள் தங்களை போன்று நேர்மைக்கும் & திறமைக்கும் பெயர் வாங்கியவர் , அவர்கள் நமது மாணவர் சமுதாயத்தை போதை வஸ்துக்கள் மூலம் கெடுத்து வைத்து உள்ளவர்கள் மீது உரிய கடுமையான அதிக பட்ச மதண்டணை கொடுத்து எதிர்கால தமிழக மாணவ மாணவிகளை இந்த தீய பழக்க த்தில் இருந்து காப்பாற்ற வேண்டும்.
    மேலும் உடநிடியாக பள்ளி களில் நல் ஒழுக்கம் சார்ந்த கல்வி முறையை கொண்டு வரவேண்டும்.ஆசிரியர் மாணவர் நல்லுறவை வளர்க்க வேண்டும்.
    எல்லை எனில் வெகு விரவிலேயே நமது தமிழகம், இந்திய தேசம் மிக மோசமான எதிர்கால இந்தியாவை பார்க்க வைத்து விடும்.
    காலம் கடந்து எடுக்கும் நடவடிக்கைகள் பயன் தராது.

  2. அய்யா வணக்கம்
    பள்ளி மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை நினைக்கும் போது கவலையாக உள்ளது போதை பொருள் விற்பனை செய்து வருகிறார்கள் என்று தெரிந்தும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க பயப்படுகிறார்கள்

  3. அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரங்கள். 13/14 வயதிலேயே பல குழந்தைகள் போதைப் பழக்கத்தைப் பழகி விடுகின்றனர்.வாழ்க்கைக் கல்வி இல்லாத நிலையில் தறி கெட்டுப் போகிறது மாணவர் சமுதாயம். குறைந்த பட்சம் அரசு இந்த மதுக்கடைகளைக்கு மூடுவிழா நடத்தினால் நல்லது 🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *