ஒரு பகுதியில் நிகழும் குற்ற நிகழ்வு குறித்து நடத்தப்படும் புலன் விசாரணை முறையானதாக இருந்தால், அக்குற்றச் செயலால் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைப்பது மட்டுமின்றி, அம்மாதிரியான குற்ற நிகழ்வுகள் அப்பகுதியில் குறையவும் அது காரணமாக அமையும். நிர்ப்பந்தத்தின் பேரிலும், உள்நோக்குடனும்  நடத்தப்படும் புலன் விசாரணை, குற்றங்கள் தொடர்ந்து நிகழக் காரணமாக அமைந்துவிடுகிறது.

அச்சம், மன உளைச்சல், பொருளாதார இழப்பு, பாலியல் துன்புறுத்தல், உயிரிழப்பு போன்றவற்றை ஏற்படுத்துகின்ற குற்றங்கள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்தல், குற்றவாளிகளை கைது செய்தல், குற்றப் பத்திரிக்கைகளை நீதிமன்றங்களில் தாக்கல் செய்தல் போன்ற செயல்களால் மட்டும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்துவிடாது. ஒரு குற்ற நிகழ்வு தொடர்பாக நடைபெறும் முழுமையான புலன் விசாரணை பொதுமக்களிடத்தில் நாம் அச்சமின்றி நிம்மதியுடன் வாழலாம் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்று சமுதாயத்தில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் யாவரும் அறிந்ததே. இந்த காலகட்டத்தில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கம் சமுதாயத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது. பெரியவர்கள் மட்டுமின்றி, பள்ளி மாணவர்களிடையேயும் போதைப் பழக்கம் பரவியுள்ள நிலையைக் காணமுடிகிறது.

போதைப் பொருட்களைக் கடத்துதல், பதுக்கி வைத்தல், விற்பனை செய்தல் தொடர்பாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததும், போதைப் பொருட்களை கைப்பற்றி, குற்றவாளிகளை கைது செய்கின்றனர். புலன் விசாரணை முடிவுற்றதும், குற்றவாளிகள் மீது குற்றப் பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கின்றனர். நீதிமன்ற விசாரணை முடிய பல ஆண்டுகள் ஆவதால், தீர்ப்பு வழங்கும் வரை குற்றவாளிகள் போதைப் பொருள் விற்பனையில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். காவல்துறையினரின் மறைமுக ஆதரவும் போதைப் பொருள் விற்பனை தொடர்ந்து நடைபெறக் காரணமாக இருந்து வருகிறது.

இந்த சூழலில், கடந்த சில மாதங்களாக தென்மாவட்ட காவல்துறையினர் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதான புலன் விசாரணையில் சட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.  போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கவும், போதைப் பொருட்கள் வியாபாரத்தில் பணம் ஈட்டி வாங்கப்பட்ட சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் சட்டத்தில் இடமுண்டு. இத்தகைய நுணுக்கமான புலன் விசாரணையை தென்மாவட்ட காவல்துறையினர் மேற்கொண்டதால், போதைப் பொருள் விற்பனை கணிசமாகக் குறையத் தொடங்கியுள்ளது.

சட்டம்-ஒழுங்கை பராமரித்தல், குற்றத் தடுப்பு, நிகழ்ந்த குற்றங்களைத் துப்பறிந்து கண்டுபிடித்தல் ஆகியவை காவல்துறையினரின் முக்கிய கடமைகள் ஆகும். இவற்றில், நிகழ்ந்த குற்றங்கள் மீதான புலன் விசாரணையை முறையாக மேற்கொள்வதின் மூலம் குற்றங்கள் தடுக்கப்படுகின்றன.  அதுவே நாட்டில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க பெரிதும் துணைபுரிகிறது.

மக்களிடையே ஏற்பட்டுள்ள சட்ட விழிப்புணர்வும், கணினி, இணையம் போன்ற அறிவியல் தொழில் நுட்பப் பயன்பாடு தவிர்க்க முடியாததாக இருந்து வருவதும் குற்ற நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துவதிலும், நிகழ்ந்த குற்றங்களைக் கண்டுபிடிப்பதிலும் காவல்துறைக்கு சவாலாக இருந்து வருகின்றன.

குற்றங்களைக் கட்டுப்படுத்துதல், சட்டம்-ஒழுங்கை பராமரித்தல், உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்துதல், காவல்துறையினரின் பயிற்சியை மேம்படுத்துதல் போன்றவை குறித்து விவாதிக்க 2014-ஆம் ஆண்டின் இறுதியில் அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் நடைபெற்ற அனைத்து மாநில காவல்துறை இயக்குநர்களின் மாநாட்டில் இந்திய பிரதமர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய பிரதமர், ‘சீர்மிகு காவல்’ (ஸ்மார்ட் போலீஸிங்) அமைப்பாக இந்திய காவல்துறையை மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், உளவுத்துறையின் தகவல்களை உள்வாங்கி காவல்துறை செயல்பட வேண்டும் என்றும், நவீன ஆயுதங்களைக் காட்டிலும் உளவுத்துறை திரட்டும் தகவல்கள் அமைதியையும், பாதுகாப்பையும் மேம்படுத்தத் துணைபுரியும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், காவல்துறையின் செயல்பாடுகளில் சில குறைபாடுகள் இருந்தால், அவற்றை சரிசெய்வதிலும், அன்றாடம் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கான தீர்வை காலதாமதமின்றி வழங்குவதிலும் காவல்துறையினர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மாநிலங்களின் காவல் இயக்குநர்களை பிரதமர் கேட்டுக் கொண்டார்.

காவல்துறையின் தரத்தை மேன்படுத்துவதற்காக நவீன தகவல் தொடர்பு கருவிகள், புலன் விசாரணைக்குத் துணைபுரியும் தடய அறிவியல் உபகரணங்கள், கலவரத்தை எதிர்கொள்ளும் காவலர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள், காவல்துறையினரின் பயன்பாட்டுக்கென மோட்டார் வாகனங்கள், பணியிடைப் பயிற்சிக்காக ஆண்டுதோறும் கணிசமான தொகை போன்றவற்றை அரசாங்கம் வழங்கி வருகிறது. இந்நிலையில், காவல்துறையின் செயல்பாடுகள் மீதான பொதுமக்களின் கணிப்பு எவ்வாறு உள்ளது?

குற்ற நிகழ்வால் ஏற்பட்ட மனவேதனை, பொருள் இழப்பு மட்டுமின்றி, எதிர்கொண்ட குற்றம் குறித்த புகார் மனு மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்ற அதிருப்தி காவல்துறை மீது சமுதாயத்தில் பரவலாக இருந்து வருகிறது. வழக்கு பதிவு செய்யாமல் குற்றங்களை மறைக்கும் செயல் காவல் நிலையங்களில் பல ஆண்டுகளாக இருந்து வந்தாலும், தற்பொழுது அது அதிகரித்துள்ளது.

கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் நம் நாட்டில் அதிகரித்துள்ள மக்கள் தொகைக்கும், முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்ட குற்ற வழக்குகளின் எண்ணிக்கைக்கும் உள்ள தொடர்பு குறித்து பார்ப்போம். 1995-ஆம் ஆண்டில் 96.39 கோடியாக இருந்த நம்நாட்டின் மக்கள் தொகை   2020-ஆம் ஆண்டில் 138 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் மக்கள் தொகை 43% அதிகரித்துள்ளது.

மக்கள் தொகை பெருக்கத்திற்கும், அதன் விளைவாக அதிகரிக்கும் குற்ற சம்பவங்களுக்கும் இடையேயான தொடர்பு குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு உலக நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒரு நாட்டின் மக்கள் தொகை பெருக்கம் 100% ஆக இருந்தால், அதன் விளைவாக குற்ற சம்பவங்கள் 120% அதிகரிக்கும் என அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நம் நாட்டில் 1995, 2010, 2020  ஆகிய ஆண்டுகளில் முறையே 60 லட்சம், 67.5 லட்சம், 66 லட்சம் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 1995 முதல் 2020 வரையிலான கால் நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 10% அதிகரித்துள்ளது. ஆனால் 2010-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2020-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

குற்ற நிகழ்வுகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, நிகழ்ந்த குற்றங்கள் மீது வழக்கு பதிவு செய்வதைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளை நம் நாட்டு காவல்துறை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது என்பதை இந்த புள்ளிவிவரங்கள் தெளிவுபடுத்துகின்றன. அனைத்து குற்ற சம்பவங்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்தால், குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவிடும் என்றும், குற்ற நிகழ்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் காவல்துறையில் கருத்து நிலவுகிறது.

குற்ற நிகழ்வுகள் குறித்து காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் புகார்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யாமல் காலம் கடத்துவதும், தவிர்ப்பதும், காவல் நிர்வாகத்தில் கையூட்டு கலாச்சாரம் உருவாக வழி வகுக்கிறது. மேலும், கொடுங்குற்றவாளிகள் பலர் சட்டத்தின் பார்வையில் படாமல், குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடவும் அது துணைபுரிகிறது.

இந்தச் சூழலில், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற காவல்துறை இயக்குநர்கள் மாநாட்டில் இந்திய பிரதமர் அறிவித்த ‘சீர்மிகு காவல்’ தற்பொழுது எப்படி செயல்பட்டுவருகிறது என்பது குறித்து நாடு தழுவிய கள ஆய்வை 2021-ஆம் ஆண்டு ‘இன்டியன் போலீஸ் ஃபவுண்டேஷன்’ மேற்கொண்டது.

‘கையூட்டு எதிர்பார்க்காமல், நேர்மையுடன் காவல்துறையினர் பணியாற்றுகின்றனரா?’ என்ற கேள்விக்கு மிகக் குறைந்த மதீப்பீட்டை பொதுமக்கள் கள ஆய்வில் அளித்துள்ளனர். ‘சீர்மிகு காவல்’ அமைப்பை சிறப்பாக நடைமுறைபடுத்துவதில் முதல் இடத்தை ஆந்திர பிரதேசமும், இரண்டாவது இடத்தை தெலங்கானா மாநிலமும் பெற்றுள்ளன. தமிழ்நாடு 13-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

குற்ற நிகழ்வுகள் மீது வழக்கு பதிவு செய்யாமல் தவிர்ப்பது சட்டத்தின் ஆட்சியை நீர்த்துபோகச் செய்யும் என்றும், அதன் தொடர்ச்சியாக சட்டம்-ஒழுங்கு சமுதாயத்தில் சீர்குலைந்துவிடும் என்றும் உச்சநீதிமன்றம் ஒரு வழக்கின் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

அனைத்து குற்ற நிகழ்வுகள் தொடர்பான புகார்கள் மீது உடனுக்குடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொள்ள போதிய காவலர்கள், காவல் அதிகாரிகள் இல்லை என்பது கள நிலவரமாக இருந்தாலும், அனைத்து குற்ற நிகழ்வுகள் மீதும் உடனடியாக வழக்கு பதிவு செய்யத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை காவல் நிலையங்களில் உருவாக்குவது குறித்து காவல்துறை தலைமையகமும், மாநில அரசும் சிந்திக்க வேண்டிய தருணம் இதுவே.

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

(13.06.2022 – ஆம் தேதிய தினமணி நாளிதழில் வெளியான கட்டுரை)

Previous post காவல் மரணங்களுக்கு தீர்வு காண்போம்!
Next post ஒரே நாடு, ஒரே காவல் சீருடை!

4 thoughts on “சீர்மிகு காவல் அமைப்பு : கள நிலவரம்

 1. நல்ல அருமைான பதிவு.
  துறையின் உயர் காவல் அதிகாரிகள் தக்க விரைவான சட்ட நடவடிக்கைகள் கொண்ட துறையாக மாற்ற
  துணிச்சலுடன் நடவடிக்கைகள்எடுக்க வேண்டும்.காவல் துறையின் மீது மக்கள் கொண்ட நல்ல நம்பிக்கை வீணாகி போக விடக்கூடாது.
  தவறினால் கொலை,கொள்ளை,பாலியல் வன்முறை,போதை பொருட்கள் பயன்பாடு,மாணவ மாணவியற்களின் ஒழுக்கம் இ ன்மை ஆகிய கொடும் செயல்கள் அதிகர்த்து விடும்.
  சமுதாயம் பாழ் பட்டு விடும்.
  ஏற்கனவே அந்த நிலை ஆரம்பித்து விட்டது.உடன் விழித்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு 13 இடத்தில் இருந்து மேலும் கீழே போய் விட கூடாது.

 2. ஐயா,மேலே, குறிப்பிட்டவைகள். அனைத்தும், ஏற்புடையது,
  ஆனால் மாநில அரசு, கவனம் செலுத்தி (காவல்துறையில் சில மாற்றம்)முயற்ச்சி செய்தால்,
  இது, மிகவும் வரவேற்கதக்கது,இது எனது கருத்து… ஐயா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *