இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டைக் கொண்டாடுகின்ற இத்தருணத்தில், அண்மையில் சென்னையில் நடைபெற்ற காவல்துறையின் சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு காவல்துறைக்கு இந்திய குடியரசு தலைவரின் ‘வண்ணப் பதாகை’ என்றழைக்கப்படும் கொடியை தமிழ்நாடு முதலமைச்சரிடம் நம்நாட்டின் துணை குடியரசு தலைவர் வழங்கினார்.

சென்னை நகர காவல்துறையின் 150-ஆவது ஆண்டை தமிழ்நாடு காவல்துறை 2009-ஆம் ஆண்டில் கொண்டாடிய பொழுது, தமிழ்நாடு காவல்துறையின் பணித்திறனை சிறப்பிக்கும் வகையில் குடியரசுத் தலைவரின் வண்ணப் பதாகை தமிழ்நாடு காவல்துறைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. அது தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம், தில்லி, மகாராஷ்டிரம், திரிபுரா, குஜராத், ஹிரியானா, அஸ்ஸாம் உள்ளிட்ட ஒன்பது மாநில, யூனியன் பிரதேச காவல்துறைக்கு இந்திய குடியரசுத் தலைவரின் வண்ணப் பதாகை வழங்கப்பட்டுள்ளது. மிக உயர்ந்த மரியாதையான இந்த வண்ணப் பதாகையைப் பெறும் பத்தாவது மாநிலம் என்ற சிறப்பை தமிழ்நாடு பெறுகிறது.

உலக அளவில் சிறப்பாக செயல்படும் காவல்துறைகளில் ஒன்றான ‘ஸ்காட்லாந்து யார்டு’ காவல்துறையோடு தமிழ்நாடு காவல்துறையை ஒப்பிட்டு பேசும் பழக்கம் நம்நாட்டில் இருந்து வருகிறது. அதற்கான தகுதியும், திறனும் தமிழ்நாடு காவல்துறை பெற்றிருந்ததை வெளிப்படுத்தும் சம்பவங்கள் பல உண்டு.

உலக நாடுகளுக்கு முன்னோடியாக, குற்ற வழக்குகளில் துப்பு துலக்க உதவும் வகையில் முதன் முதலில் கைவிரல் ரேகைக்கூடம் ஒன்று சென்னையில் காவல் ஆய்வாளர் தலைமையில் 1895-ஆண்டில் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்தே இந்தியாவின் பிற நகரங்களிலும், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகளிலும் கைவிரல் ரேகைக்கூடங்கள் தொடங்கப்பட்டன.

புலன் விசாரணைக்குத் துணைபுரியும் தடய அறிவியல் துறையும் மேலைநாடுகளுக்கு இணையாக தமிழ்நாட்டில் சிறப்புடன் செயல்பட்டு, சிக்கலான வழக்குகளில் துப்பு துலக்க புலன் விசாரணை அதிகாரிகளுக்கு துணைபுரிந்த சம்பவங்கள் பல உள்ளன.

குற்றங்களைக் கண்டுபிடிக்க இன்று பெரிதும் துணைபுரியும் கண்காணிப்பு கேமரா, கைபேசி போன்றவை கண்டுபிடிக்கப்படாத காலத்தில், ரகசிய விசாரணையின் மூலம் முக்கியத்துவம் வாய்ந்த பல குற்ற வழக்குகளில் துப்பு துலக்கிய பெருமை தமிழ்நாடு காவல்துறைக்கு உண்டு.

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அளவில் பரபரப்பாகப் பேசப்பட்ட ‘நூறு ரூபாய் கள்ள நோட்டு’ வழக்கில் தமிழ்நாடு காவல்துறை துப்பு துலக்கிய விதம், ஒரு குற்ற வழக்கில் புலன் விசாரணை எப்படி செய்ய வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்கிறது.

1959-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பல இடங்களில் நூறு ரூபாய் கள்ளநோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன. இந்த கள்ள நோட்டுகள் எங்கு, யாரால் அச்சடிக்கப்பட்டன என்பது குறித்து துப்பு துலக்கும் சிக்கலான வழக்கின் புலன் விசாரணையை தமிழ்நாட்டின் தலைசிறந்த காவல் அதிகாரிகளில் ஒருவரான எஃப்.வி.அருள் தலைமையின் கீழ் இயங்கிவந்த தமிழ்நாடு குற்றப் புலனாய்வுத்துறை மேற்கொண்டது.

கள்ள நோட்டுகளை அச்சிட்டு, புழக்கத்திற்கு விட்ட குற்றவாளிகள் யார் என்பதை குற்றப் புலனாய்வுத்துறை அடையாளம் கண்டுபிடித்துவிட்டாலும், கள்ள நோட்டுகளை அச்சிட்ட இடம், அச்சு இயந்திரங்கள் போன்றவற்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஒரு புதிய அணுகுமுறையை குற்றப் புலனாய்வுத்துறை மேற்கொண்டது.

இவ்வழக்கில் தொடர்புடையவர் என சந்தேகப்பட்ட ஒரு முக்கிய குற்றவாளி ஒருவருக்கு கோயம்புத்தூர் சுற்று வட்டாரத்தில் விருந்தினர் மாளிகைகள் உள்ளன என்றும், அசைவ உணவு தயாரிக்கும் நல்ல சமையல்காரர் ஒருவர் தேவைப்படுகிறார் என்றும் புலன் விசாரணை அதிகாரிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அசைவ உணவு நன்கு சமைக்கத் தெரிந்த ஒரு தலைமைக் காவலரின் தோற்றத்தை மாற்றி அமைத்து, சந்தேகத்திற்குரிய குற்றவாளியிடம் சமையல்காரர் வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு சரளமாக மலையாளம் பேசத் தெரிந்திருந்தது. இது மாறுவேடத்தில் பணியில் இருந்த அவருக்கு உதவிகரமாக இருந்தது. சில மாதங்களில் அந்த ‘சமையல்காரர்’ தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து முடித்தார்.

கள்ள நோட்டுகள் அச்சிட்ட இடங்கள், அச்சு இயந்திரங்கள் உள்ளிட்ட   விவரங்கள் கண்டறியப்பட்டு, இக்குற்றச் செயலில் ஈடுபட்ட எட்டு குற்றவாளிகள் 1960-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். ஓராண்டுக்குள் அவர்கள் மீதான நீதிமன்ற விசாரணை முடிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு தலா 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றவாளிகளுக்கு உதவி செய்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவரும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற விசாரணையில் அவருக்கும் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப காலங்களில் குற்ற வழக்குகளில் துப்பு துலக்க அறிவியல் தொழில் நுட்பங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. கண்காணிப்பு கேமரா, கைப்பேசி மூலம் துப்பு கிடைக்கும் வழக்குகளில் குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்படுவதையும், அவற்றின் மூலம் துப்பு கிடைக்காத வழக்குகளில் புலன் விசாரணை முன்னேற்றம் இன்றி, தேங்கிக் கிடப்பதையும் காணமுடிகிறது.

குற்றம் நிகழும் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா இருப்பதில்லை. சம்பவ இடத்தில் கண்காணிப்பு கேமரா இருந்தாலும், அதனை கைதேர்ந்த குற்றவாளிகள் செயலிழக்கச் செய்து, துப்பு துலக்கப் பயன்படாத வகையில் செய்துவிடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

துப்பு துலக்கத் தேவையான தகவல்களை வெளிப்படுத்தாத வகையில், கைப்பேசிகளைப் பயன்படுத்தும் முறையும் தற்பொழுது நடைமுறைக்கு வந்துள்ளது. துப்பு துலக்கத் துணைபுரியும் அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் காலப்போக்கில் குற்றவாளிகள் முறியடித்துவிடும் அபாயம் தவிர்க்க முடியாதது.

குற்றம் நிகழ்ந்த இடத்தில் உள்ள அனைத்து தடயங்களையும் சேகரிப்பதிலும், குற்ற நிகழ்வைப் பார்த்த, குற்றச் செயல் தொடர்பான தகவல் தெரிந்த சாட்சிகளைக் கண்டறிந்து, அவர்களிடம் காலதாமதமின்றி விசாரணை மேற்கொள்வதிலும் ஏற்படும் தொய்வு காரணமாக, பல வழக்குகள் துப்பு துலங்காமல் தேங்கிக் கிடக்கின்றன. காலம் கடந்து மேற்கொள்ளும் புலன் விசாரணை பல நேரங்களில் எதிர்பார்த்த பலனைக் கொடுப்பதில்லை.

காவல்துறையில் பணிபுரியும் சிலர், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதும், புலன் விசாரணையின் பொழுது குற்றவாளிகளை கைது செய்யாமல் வழக்கிலிருந்து தப்பிக்க வைப்பதுமான செயல்களில் ஈடுபடும் துரதிருஷ்டவசமான நிலை அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. நம்நாட்டில் குற்ற நிகழ்வுகள் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

புலன் விசாரணையின் வெற்றி என்பது குற்றவாளிகளை அடையாளம் கண்டறிந்து, கைது செய்வதோடு முடிந்து விடுவதில்லை. நீதிமன்ற விசாரணையில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வகையில் சாட்சியங்களைத் திரட்டுவதுதான் புலன் விசாரணையின் வெற்றியாகும்.

தேசிய குற்ற ஆவணக்கூட அறிக்கையின்படி, இந்தியாவில் 2020-ஆம் ஆண்டில் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட கொலை வழக்குகளில் 44% உம், கொலைமுயற்;சி வழக்குகளில் 25% உம், வழிப்பறி வழக்குகளில் 38% உம் தண்டனையில் முடிவடைந்துள்ளன.

ஆனால், தமிழ்நாட்டில் 2020-ஆம் ஆண்டில் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட கொலை வழக்குகளில் 28% உம், கொலைமுயற்சி வழக்குகளில் 16% உம், வழிப்பறி வழக்குகளில் 25% உம் தண்டனையில் முடிவடைந்துள்ளன. அதிக எண்ணிக்கையிலான கொடுங்குற்ற வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் விடுதலை அடைவதற்கான காரணங்கள் பல இருந்தாலும், அவைகளில் முக்கியமானது தற்போதைய புலன் விசாரணை முறையாகும்.

கடந்த காலத்தில், புலன் விசாரணை அதிகாரியே வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்களை நேரிடையாகப் பதிவு செய்து, குற்றப் பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆனால், தற்பொழுது பெரும்பாலான காவல் நிலையங்களில் சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தல், வழக்கு கோப்புகளைத் தயார் செய்தல் போன்ற புலன் விசாரணை தொடர்பான பணிகளை ஓய்வு பெற்ற தலைமைக் காவலர்கள், உதவி ஆய்வாளர்களிடம் ஒப்படைக்கப்படும் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.

காவல் நிலையங்களில் இருந்து கொடுக்கப்படும் சிறு தொகையைப் பெற்றுக் கொண்டு, அவர்கள் தயார் செய்து கொடுக்கும் சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் நடத்தப்படும் நீதிமன்ற விசாரணையில், குற்றவாளிகள் தண்டனை அடைவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

சென்னை உயர்நீதின்றத்தில் அண்மையில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை மேல்முறையீடு வழக்கு ஒன்றின் விசாரணையின் பொழுது, குற்ற வழக்குகளில் சாட்சியம் அளிக்க பொதுமக்கள் முன் வருவதில்லை என நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் மீதுள்ள பயமும், புலன் விசாரணை அதிகாரிகள் மீதுள்ள அவநம்பிக்கையும் பல சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் சாட்சியம் அளிக்க முன்வராமல் இருப்பதற்கு காணரங்களாகி விடுகின்றன.

புலன் விசாரணையின் தரம் உயர்த்துவதும், குற்ற வழக்குகள் மீதான நீதிமன்ற விசாரணையில் புலன் விசாரணை அதிகாரிகள் கவனம் செலுத்துவதும் சமுதாயத்தில் நிகழும் குற்றங்களைக் கட்டுப்படுத்த பெரிதும் துணைபுரியும்.

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

(23.08.2022– ஆம் தேதிய தினமணி நாளிதழில் வெளியான கட்டுரை)

2 thought on “மறைந்துவரும் புலனாய்வு நுட்பங்கள்!”
  1. முற்றிலும் உண்மை.
    இது தவிர இப்போதெல்லாம் பெரும்பாலும் மாவட்ட அதிகாரிகள் தங்கள் மாவட்டத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் நேர்மையாகப் பணிபுரியவேண்டும் என்றோ புலன் விசாரணையைத் திறமையாகச் செய்ய வேண்டும் என்றோ எதிர்பார்ப்பதாகத் தெரியவில்லை. வழக்கு விசாரணை முடித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் போதும் என்ற மனநிலையே காணப்படுகிறது. நியாயம் கிடைக்கவேண்டும் என்றால் பெரும் போராட்டம் நடத்த வேண்டிய நிலை தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *