
தூத்துக்குடியில் 2018-ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக நடைபெற்ற தொடர் போராட்டத்தின் நூறாவது நாளில், காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை கடந்த மே மாதம் தமிழக முதலமைச்சரிடம் கொடுக்கப்பட்டது.
அண்மையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டது. ஆணையத்தின் பரிந்துரையின் படி, சட்டம்-ஒழுங்கை சரியாக பராமரிக்காததினால் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழக் காரணமான காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை பரிசீலனையில் இருந்து வருகிறது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி வன்முறை சம்பவத்தின்போது பணியில் இருந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதினால் மட்டும், பொது அமைதியைச் சீர்குலைக்கும் இம்மாதிரியான அசம்பாவித சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்துவிட முடியாது.
சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்புடைய காவல் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், இவற்றுக்கு இடையேயான ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவற்றில் காலப்போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் விளைவுதான் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு போன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழக் காரணமாக இருந்துள்ளது.
சம்பவ தினத்தன்று போராட்டக்காரர்கள் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் வன்முறையில் ஈடுபட திட்டமிட்டு இருந்தனர் என்ற தகவலை எஸ்.பி, டி.ஐ.ஜி, ஐ.ஜி உள்ளிட்ட காவல் உயரதிகாரிகள் எவரும் தன்னிடம் தெரியப்படுத்தவில்லை என்றும், அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட போராட்டக்காரர்கள் திட்டமிட்டு இருந்தனர் என்ற தகவலும் தனக்கு முன்கூட்டியே தெரியாது என்றும் மாவட்ட ஆட்சியர் விசாரணையின் பொழுது தெரிவித்தார் என ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரின் இந்த வாக்குமூலம் முழுமையாக ஏற்புடையதாக இல்லை என்றாலும், சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் பணியில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து செயலாற்றவில்லை என்ற கள எதார்த்த நிலையை மாவட்ட ஆட்சியரின் வாக்குமூலத்தில் இருந்து உணர முடிகிறது.
சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதில் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் உள்ள கடமைகள் குறித்து சட்டம் கூறுவது என்ன? இவ்விரு துறைகளும் அவரவர் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவதில், நடைமுறை சிக்கல் ஏதேனும் உள்ளதா? உளவுத் தகவல்கள் மாவட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு உடனுக்குடன் கொண்டு செல்லப்படுகிறதா? இவை போன்ற கேள்விகள் குறித்த ஆய்வு, தற்போதைய சூழலில் சட்டம்-ஒழுங்கை மேம்படுத்த வழிகாட்டியாக அமையும்.
இந்தியாவில் காவல் அமைப்பை ஏற்படுத்துவதற்காக ஆங்கிலேயர்கள் 1861-ஆம் ஆண்டில் இந்திய காவல் சட்டத்தை இயற்றினர். இச்சட்டத்தின் படி, மாவட்ட நிர்வாக நீதிபதி என்றழைக்கப்படும் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதல்படியும், பொதுவான கட்டுப்பாட்டின் கீழும் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் மாவட்ட காவல் நிர்வாகம் செயல்பட வேண்டும்.
மாவட்டத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு குறித்து ஆய்வு மேற்கொண்டு, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க காவல் அதிகாரிகளுக்குத் தேவையான நிர்வாக ரீதியான ஆலோசனை, ஆதரவு போன்றவற்றைக் கொடுக்க வேண்டிய பொறுப்பு மாவட்ட ஆட்சியருக்கு உண்டு.
மாவட்டத்தில் பதற்றமான சூழல் உருவாகி, சட்டம்-ஒழுங்கு சீர்குலையும் நிலை ஏற்படும் என மாவட்ட நிர்வாகம் கருதினால், நான்கு நபர்களுக்கு மேல் பொது இடங்களில் கூடக் கூடாது என்ற 144 தடை ஆணையைப் பிறப்பிக்கும் அதிகாரம் மாவட்ட நிர்வாக நீதிபதி என்ற முறையில் மாவட்ட ஆட்சியருக்கு உண்டு.
பொது அமைதிக்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்படும் கொடுங்குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் விசாரணையின்றி ஓராண்டு காலம் சிறையில் அடைக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு உண்டு. மாவட்டத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் பெரும் பதற்ற சூழலை உருவாக்கிய ஜாதி, மத ரீதியான மோதல் சம்பவங்களின் பொழுது காவல் உயரதிகாரிகளும், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட நிர்வாகமும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மாவட்டத்தில் நிலவிய பதற்ற சூழலைத் தணித்து, இயல்பு நிலையை ஏற்படுத்திய சம்பவங்கள் பல உண்டு.
கடந்த காலத்தில் சவால்கள் நிறைந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை காவல்துறையினர் எதிர்கொண்ட பொழுது, மாவட்ட ஆட்சியர் மட்டுமின்றி மாவட்ட நிர்வாகத்தின் கீழ் செயல்படும் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்கும் இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு, அவர் பணிபுரியும் மாவட்டத்தில் புகைந்து கொண்டிருக்கும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்த முழு விவரம் தெரியமால் இருப்பதும் உண்டு. இம்மாதிரியான சந்தர்ப்பங்களில், அனுபவம் வாய்ந்த காவல் உயரதிகாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் கருத்து பரிமாறிக் கொள்வதும், அதன் வாயிலாக மாவட்ட ஆட்சியரின் ஒத்துழைப்புடன் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை எதிர்கொள்வதும் கடந்த காலத்தில் நடைமுறையில் இருந்த வந்தன.
இம்மாதிரியான கருத்து பரிமாற்றங்கள் தூத்துக்குடி தொடர் போராட்டத்தின் பொழுது நடைபெற்றிருந்தால், போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட திட்டமிட்டிருந்த தகவலை காவல் உயரதிகாரிகள் யாரும் தன்னிடம் தெரியப்படுத்தவில்லை என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விசாரணை ஆணையத்திடம் கூறியிருக்கமாட்டார்.
சட்டம்-ஒழுங்கு தொடர்பான உளவுத் தகவல்களை மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவிக்கும் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. அதேசமயம், மாவட்ட ஆட்சியரின் நேரடிக் கட்டுப்பாட்டிலும் உளவுத் தகவல் திரட்டும் அமைப்பு ஒன்று இருந்து வருகிறது.
ஒவ்வொரு கிராம நிர்வாக அதிகாரியும், கிராம உதவியாளரும் தாங்கள் பணிபுரியும் பகுதியில் உளவுத் தகவல்களைத் திரட்டி, மாவட்ட ஆட்சியருக்கு வட்டாட்சியர் மூலமாகத் தெரியப்படுத்தும் பழக்கம் நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. இதை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செயல்பட வைத்திருந்தால், போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட தீட்டிய திட்டம் தனக்கு தெரியாது என்று விசாரணை ஆணையத்திடம் அவர் தெரிவித்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.
சட்டம்-ஒழுங்கு பிரச்சினை அடிக்கடி நிகழும் தென்மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடனும், வருவாய் கோட்டாட்சியர்களுடனும் மாவட்ட ஆட்சியர் கடந்த காலங்களில் வாரம்தோறும் நடத்தி வந்த சட்டம்-ஒழுங்கு ஆலோசனைக் கூட்டம் காலப்போக்கில் நடைபெறாமல் நிறுத்தப்பட்டு விட்டது. அதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்த போது, சில மாவட்ட கண்காணிப்பாளர்கள் அக்கூட்டங்களில் கலந்து கொள்ளாமல், தனிப்பிரிவு ஆய்வாளர்களை அனுப்பி வைத்தனர் என்பது தெரிந்தது.
மாவட்ட எஸ்.பி.க்களின் வாராந்திர நாட்குறிப்பு அறிக்கைகள் மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக காவல் உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் நடைமுறை நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையால் மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட எஸ்.பி.க்கும் இடையேயான நிர்வாக அணுகுமுறையில் நெருடல் ஏற்பட்ட சம்பவங்களும் உண்டு. இந்த நடைமுறை மீதான அதிருப்தி பெரும்பாலான மாவட்ட எஸ்.பி.க்களுக்கு இருந்து வருகிறது.
தூத்துக்குடி கலவரத்தின்போது மாவட்ட எஸ்.பி.யை வழிநடத்த வேண்டிய காவல் உயரதிகாரிகளுக்கு தூத்துக்குடி நகரின் நிலப்பரப்பு குறித்த விவரம் தெரியாததால், கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் அவர்கள் தடுமாற்றம் அடைந்துள்ளனர் என நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
காவல் உயரதிகாரிகள் தங்களது கண்காணிப்பு, மேற்பார்வைக்கு உட்பட்ட மாவட்டங்கள் குறித்த விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ளாமல், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு பணியின் போது, சம்பவ இடத்திற்குப் பார்வையாளர்களாகச் செல்லும் நடைமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை விசாரணை ஆணையத்தின் அறிக்கை உணர்த்துகிறது.
சட்ட விழிப்புணர்வும், சமூக ஊடகங்களின் செயல்பாடுகளும் பொதுமக்களிடையே அதிகரித்து வருகின்ற இன்றைய சூழலில், பொது அமைதியை பாதிக்கும் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை எதிர்கொள்வது காவல்துறைக்குப் பெரும் சவாலாக மாறி வருகிறது.
சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புப் பணிக்கான திட்டமிடுதல், மாவட்ட நிர்வாகத்தை பாதுகாப்பு பணியில் ஒருங்கிணைத்தல், பாதுகாப்புப் பணியின் பொழுது ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களுக்கு ஏற்ப களப்பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் – காவலர்களுக்கு முறையான அறிவுரைகளை உடனுக்குடன் வழங்குதல் போன்றவற்றில் காவல் உயரதிகாரிகளின் பங்களிப்பும், உளவுத்துறையின் வழிகாட்டுதலும் அவசியமானவை ஆகும்.
மிகவும் பயனுள்ள அருமையான அறிவுறுத்தல்கள் கொண்ட பதிவு.
மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண் கானிப்பாளர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்த உளவு தகவல் பரி மாற்றம் செய்து இருந்தால் இத்தகைய அசம்பாவிதங்கள் தவிர்க்கப் பட்டிருக்கலாம் என்பது உங்கள் பதிவு மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த மாதிரி இமாலய தவறுகள்(உயிர் பலி) மேலும் தொடராமல் இருக்க ,அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவனமின்றி செயல் பட்ட அதிகாரி கள் மீது தக்க நடவடக்கை எடுக்க வேண்டும்.
அய்யா வணக்கம்
மிக அருமையான விளக்கம் சிறப்பு