குற்றச் செயலில் ஈடுபட்ட சிறார்களுக்கு ஆயுள் தண்டனையோ, மரண தண்டனையோ வழங்கக் கூடாது என சிறார் நீதிச் சட்டமும், குழந்தைகளின் உரிமைகள் மீதான ஐக்கிய நாடுகள் மாநாட்டின் தீர்மானமும் சுட்டிக் காட்டியிருக்கின்ற நிலையில், பதினேழு வயதில் குற்றச் செயலில் ஈடுபட்ட ஒரு சிறுவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்ற தீர்ப்பு அண்மையில் தமிழ்நாட்டில் வெளிவந்துள்ளது.

ஏழு வயதான சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து, பின்னர் அவரைக் கொலை செய்து, பிரேதத்தை மறைத்து வைத்த குற்றச் செயல்களுக்காக இரட்டை ஆயுள் தண்டனையடைந்த அந்த சிறார் குற்றவாளி, தற்போது தமிழ்நாட்டிலுள்ள மத்திய சிறைசாலை ஒன்றில் ஆயுள் கைதியாக இருந்து வருகிறான்.

பதினெட்டு வயது பூர்த்தியடையாத நிலையில், அச்சிறுவன் செய்த குற்றச் செயலுக்காக சிறார் சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்காமல், அவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி, மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கக் காரணம் என்ன?

தலைநகர் தில்லியில் 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் இரவில், மருத்துவ மாணவி ஒருவர் பேருந்தில் பயணம் செய்த பொழுது, பேருந்தின் ஓட்டுநர் உள்பட ஆறு நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆட்பட்டு, அதன் விளைவாக உயிரிழந்தார். இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட ஆறு குற்றவாளிகளில் நான்கு பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. ஒரு குற்றவாளி விசாரணையின் தீர்ப்பு வெளியாகும் முன்னரே தற்கொலை செய்து கொண்டான்.

ஆறாவது குற்றவாளி குற்றம் நிகழ்ந்த பொழுது பதினெட்டு வயது பூர்த்தியடையாத சிறுவன் என்ற காரணத்தால், அவன் மீதான குற்ற விசாரணையை நடத்திய சிறார் நீதிக் குழுமம், அவனை சிறார் சீர்த்திருத்தப் பள்ளியில் மூன்று ஆண்டுகள் தங்கியிருக்கும்படி ஆணை பிறப்பித்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அவன் அங்கிருந்து விடுவிக்கப்பட்டான்.

சிறார் நீதிக் குழுமம் வழங்கிய இத்தீர்ப்பு நாடு முழுவதும் கடும் கண்டனத்தை எதிர்கொண்டது. அதன் விளைவாக, 2015-ஆம் ஆண்டில் சிறார் நீதிச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அத்திருத்தத்தின் படி, 16 முதல் 18 வயதுடைய சிறார் கொடுங்குற்றச் செயலில் ஈடுபட்டால், அச்சிறாரின் மன உறுதி, உடல் திறன், அக்குற்றத்தின் பின்விளைவுகளை அறிந்து கொள்ளும் திறன், அக்குற்றம் புரியப்பட்ட சூழல் போன்றவை குறித்து உளவியல் நிபுணர்களின் உதவியுடன் ‘பூர்வாங்க மதிப்பீடு’ அறிக்கையை சிறார் நீதிக் குழுமம் தயாரிக்க வேண்டும்.

பூர்வாங்க மதிப்பீட்டின் அடிப்படையில், அச்சிறார் புரிந்த கொடுங்குற்றச் செயலை வயது வந்தவர் புரிந்த குற்றச் செயலாகக் குருதி, அவர் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டுமா? அல்லது குற்றம் புரிந்தவனை சிறார் எனக் கருதி, சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டுமா? என்ற முடிவை சிறார் நீதிக் குழுமம் தீர்மானிக்க வேண்டும் என 2015-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தம் கூறுகிறது.  

இச்சட்டத் திருத்தத்தின் அடிப்படையில், ஏழு வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து, கொலை செய்த சிறார் குற்றவாளியை வயது வந்தோர் எனக் கருதி, அவர் மீதான குற்ற விசாரணையை மேற்கொண்ட நீதிமன்றம் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையை வழங்கியது.

இன்றைய சமுதாய சூழலில், அறிவியல் நுட்பத்துடன் கொடுங்குற்றங்கள் புரிவதை வெளிப்படுத்தும் காட்சி ஊடகங்கள் சிறார்களிடம் ஏற்படுத்தும் தாக்கம், சிறார்களைத் திட்டமிட்டு கொடுங்குற்றச் செயல்களில் ஈடுபடுத்தும் வயது வந்தவர்களின் செயல்பாடுகள், சிறார்கள் மீதான பெற்றோர்கள் – ஆசிரியர்களின் கண்காணிப்பில் நிலவிவரும் தொய்வு போன்ற காரணங்களால் கொடுங்குற்றச் செயல்களில்; ஈடுபடும் 16 முதல் 18 வயதுடைய சிறார்களின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகரித்து வருகிறது.

தேசிய குற்ற ஆவணக்கூடம் திரட்டிய புள்ளிவிவரங்களின் படி, 16 முதல் 18 வயதுக்குட்ட 26,954 சிறார்கள் 2020-ஆம் ஆண்டிலும், 28,539 சிறார்கள் 2021-ஆம் ஆண்டிலும் சிறை தண்டனைக்குரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக சிறார் நீதிக் குழுமம் முன்பு ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.  இச்சிறார்கள் அனைவருக்கும், அவர்கள் செய்த குற்றம் தொடர்பாக ‘பூர்வாங்க மதிப்பீடு’ செய்யாமல், சமுதாயத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட சிறார்களுக்கு மட்டும் பூர்வாங்க மதிப்பீட்டை சிறுவர் நீதிக் குழுமம் செய்துள்ளது.

சிறார் நீதிச் சட்டத்தை முறையாக நடைமுறை படுத்தாததால், கொடுங்குற்றச் செயலில் ஈடுபட்ட 16 முதல் 18 வயதுடைய சிறார்கள் பலர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவது இல்லை. சான்றாக, சென்னையை அடுத்துள்ள ஒரு மாவட்டத்தில், சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கொலையைச் செய்த 17 வயதுடைய சிறுவன் குறித்து பூர்வாங்க மதீப்பிடு செய்யாமல், 15 நாட்களிலே அவன் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளான்.

சிறை தண்டனைக்குரிய குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறார்களை கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்ததும், அவர்களை குற்றச் செயலில் ஈடுபடத் தூண்டிய சமூகக் காரணிகளான அவர்களின் குடும்பம் மற்றும் வசிப்பிட சூழல் குறித்து ‘நன்னடத்தை அலுவலர்’ கள ஆய்வு செய்து, ‘சமூகப் புலனாய்வு அறிக்கை’ தயாரிக்க வேண்டும் என சிறார் நீதிச் சட்டம் அறிவுறுத்தியுள்ளது. இவ்வறிக்கையின் அடிப்படையில்தான், கூர்நோக்கு இல்லத்திலிருந்து சிறார்கள் விடுவிக்கப்படுகிறார்கள்.

சிறார்களின் வசிப்பிடம் சென்று கள ஆய்வு செய்யாமல், கூர்நோக்கு இல்லத்தில் தங்கியிருக்கும் சிறார்களிடையே விசாரணை செய்து, சமூகப் புலனாய்வு அறிக்கை தயாரிக்கின்ற பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. இதன் காரணமாக, சட்டத்திற்கு முரணாகச் செயல்படும் சிறார்களுடன் தொடர்பில் இருந்துவரும் உள்ளுர் பழங்குற்றவாளிகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளிச்சத்திற்கு வருவதில்லை. இதனால், சட்டத்திற்கு முரணாகச் செயல்படும் ‘சிறார்கள் சீர்திருத்தம்’ என்பது எழுத்தளவில் இருந்து வருகிறது.

‘சமூகப் புலனாய்வு அறிக்கை கள ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்படுவது இல்லை. அதனால், அதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது’ என அண்மையில் வழங்கிய தீர்ப்பு ஒன்றில் அலகாபாத் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

கூர்நோக்கு இல்லம், சிறப்பு இல்லத்திலிருந்து விடுக்கப்படும் சிறார்களின் செயல்களைக் கண்காணித்து, தவறான வாழ்க்கைப் பாதையில் அவர்கள் மீண்டும் சென்றுவிடாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை நன்னடத்தை அலுவலர்களிடம் சிறார் நீதிச் சட்டம் ஒப்படைத்துள்ளது.

கூர்நோக்கு இல்லங்களில் ஒப்படைக்கப்படும் சிறார்களில் பலர் ஏற்கனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக பிடிபட்டு, கூர்நோக்கு இல்லத்தில் சில மாதங்கள் தங்கிச் சென்றவர்கள் என்பது கள ஆய்வில் தெரியவருகிறது. சட்டத்திற்கு முரணாகச் செயல்படும் சிறார்களைச் சீர்திருத்தி, நல்வழிப்படுத்துதல் என்பது உரிய கவனம் பெறப்படவில்லை என்பதை இந்த கள ஆய்வு வெளிப்படுத்துகிறது.

பெற்றோர்களை இழந்த, பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்ட, சாலையோரங்களில் வசித்து வரும் சிறார்கள்தான் பெரும்பாலும் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்ற கருத்து பலரிடம் வெளிப்படுகிறது. ஆனால், 2021-ஆம் ஆண்டில் நம் நாட்டில் குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக பிடிக்கப்பட்ட 37,444 சிறார்களில் 85% பேர் பெற்றோர்களுடன் வசித்து வருபவர்கள் என்பதும், 2020-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2021-ஆம் ஆண்டில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறார்களின் எண்ணிக்கை 26% அதிகரித்துள்ளது என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

2021-ஆம் ஆண்டில் இந்திய மாநிலங்களிடையே அதிகமான குற்றச் செயல்களில் சிறார்கள் ஈடுபட்ட மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு நான்காவது இடமும், அதிக எண்ணிக்கையிலான சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இந்திய பெருநகரங்கள் பட்டியலில் சென்னை பெருநகரம் இரண்டாவது இடமும் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் 2021-ஆம் ஆண்டில் 84 கொலை வழக்குகளிலும், 102 கொலை முயற்சி வழக்குகளிலும், 481 திருட்டு வழக்குகளிலும், 326 வழிப்பறி, களவு மற்றும் கொள்ளை வழக்குகளிலும், குழந்தைகளிடம் பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக ‘போக்சோ’ சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 184 வழக்குகளிலும் சிறார்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது சட்டத்திற்கு முரணான செயல்களில் சிறார்களை ஈடுபடச் செய்யும் சூழல் தமிழ்நாட்டில் நிலவி வருவதை உணர்த்துகிறது.

உணவு, உடை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக குற்றச் செயல்களில் சிறார்கள் ஈடுபட்டுவந்த காலத்தை இன்றைய சமுதாயம் கடந்து வந்துவிட்டது. கொலை, பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல், போதைப் பொருட்கள் விற்பனை, வழிப்பறி போன்ற கொடுங்குற்றச் செயல்களில் தனியாகவும், பழங்குற்றவாளிகளுடன் இணைந்தும் சிறார்கள் ஈடுபடுகின்ற நிலையைக் காணமுடிகிறது.  சிறார் குற்றங்கள் குறித்து நடத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், சிறார்களின் வயதை 18-இல் இருந்து 16-ஆகக் குறைப்பதும் சிறார் குற்றங்களுக்கான தீர்வாக அமையாது. 

சமூக நாகரிகம் என்ற பெயரில் மது பழக்கம், போதைப் பொருள் பழக்கம் சிறார்களிடம் அதிகரித்து வருவதும், வளர்பருவ சிறார்களிடம் ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கத் தவறியதும் சிறார் குற்றங்கள் அதிகரித்து வருவதற்கான காரணங்களாகும். ஒழுக்கத்தை சிறார்களிடம் வளர்ப்பதில் ஆசிரியர்கள் கடந்த காலத்தில் எடுத்துக் கொண்ட ஆர்வம் தற்பொழுது பெருமளவில் குறைந்துவிட்டது.

சிறார் நீதிச் சட்ட விதிகளை முறையாக அமல்படுத்துவது குறித்தும், கல்வியோடு ஒழுக்கத்தையும் பள்ளிகளில் சிறார்களுக்கு கற்றுக் கொடுப்பது குறித்தும் அரசு பரிசீலனை செய்ய வேண்டியது காலத்தில் கட்டாயம்.

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

(10.10.2022 – ஆம் தேதிய தினமணி நாளிதழில் வெளியான கட்டுரை)

4 thought on “அதிகரித்துவரும் சிறார் குற்றங்கள்”
 1. தங்கள் பதிவு மூலம் நம் தமிழ் நாடு சிரார் குற்றங்களில் எந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்து உள்ளது என தெரிய வருகிறது.
  என்றைக்கு சமுதாயம் நேர்மை,ஒழுக்கம், சத்தியம் பெண்மை போற்றுதல் ஆகியவற்றிருந்து விலகும் போது நிச்சயமாக சிறார் குற்றங்கள் அதிகரிக்கத்தான் கூடும்.
  அதுவும் சமீப காலங்களில் பெண் குழந்தைகள் மீது சிறார்,பள்ளி மாணவர்கள் செய்து வரும் பாலியல் குற்றங்கள் மிக மிக அதிகரித்து வருகிறது என்பது மிகவும் கவலை அளிக்கிற விசயம்.
  இது மாதிரி குற்றம் செய்தால் மிக கடுமையான தண்டனை கிடைக்கும் , வாழ் நாள் முழுவதும் நடை பிணமாக வாழ நேரிடும் என சிறார்கள் என்னும் படியான தண்டனை வழங்க விடில்,குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்பு குறைவு . அடிப்படை காரணங்கள் மது,போதை வஸ்துக்கள் இலகுவாக கிடைப்பது முக்கிய காரணம்.
  தீர்வு:கடுமையான தண்டனை .

 2. பள்ளியில் மாணவனை கண்டிக்கும் உரிமை ஆசிரியருக்கு இல்லை.
  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் செய்யும் தவறுகளை மறைக்கிறார்கள்.
  சிறார்கள் கைகளில் தவழும் ஆன்ட்ராயிடு போன் அனைத்து தீய பழங்கங்களையும் வழிநடத்த ஏதுவாக உள்ளது. பிள்ளைகள் கையில் தேவைக்கு அதிகமான பணப்புழக்கம். இவை எல்லாம் சமுதாய வளர்ச்சி என கருதும் மக்கள். இவைகளெல்லாம் சிறார் குற்றம் அதிகரிக்க காரணம். தங்களின் இப்பதிவை படித்த பின்னராவது இச்சமுதாயம் விழிப்படைய வேண்டும்.

 3. அய்யா வணக்கம்
  நல்ல பதிவு
  முன்பு எல்லாம் ஆசிரியர்களுக்கு மதிப்பு மரியாதை இருந்தது. ஆசிரியர்களின் கண்டிப்பு குறைவான காரணத்தால் பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாக உள்ளார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *