கோவை நகரில் அண்மையில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தில் பொதுமக்களின் உயிரிழப்போ, பொருட்சேதமோ இல்லாத காரணத்தால், ஓரிரு நாட்களிலே கோவை நகர மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். தீவிரவாதிகளால் இச்சம்பவம் நிகழ்ந்ததாக தமிழ்நாடு காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததைத் தொடர்ந்து, இவ்வழக்கின் புலன் விசாரணையை தமிழ்நாடு அரசு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்துள்ளது.

புலன் விசாரணையில் இருந்துவரும் கோவை கார் வெடிப்பு வழக்கின் விவரங்கள் குறித்து விவாதிப்பது முறையாக இருக்காது. இத்தீவிரவாத சம்பவத்தில் பங்கெடுத்துக் கொண்டவர்களை அடையாளம் கண்டறிந்து, அவர்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்துவதே புலன் விசாரணையின் நோக்கம் ஆகும்.

ஆங்கிலேயர்கள் 1947-ஆம் ஆண்டில் நம்நாட்டை விட்டு வெளியேறும் போது, இந்தியா, பாகிஸ்தான் என மதத்தின் அடிப்படையில் இரு நாடுகளை உருவாக்கிய காலம் முதற்கொண்டு, மத தீவிரவாத, பயங்கரவாத செயல்களை இந்தியா எதிர்கொண்டு வருகிறது.

‘கரோனா பெருந்தொற்று உலக நாடுகளில் தீவிரமாகப் பரவிவந்த காலகட்டத்தில், பொதுமுடக்கத்தை அமல்படுத்த காவல்துறை முழுமையாக ஈடுபடுத்தப்பட்டது. பல நாடுகளில் தீவிரவாதத் தடுப்பு செயல்;களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டது.

அக்காலகட்டத்தில், தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தும் செயல்திட்டங்கள் பல நாடுகளில் பின்னுக்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, தீவிரவாத குழுக்கள் தங்களை ஒருமுகப்படுத்தி, தங்களின் செயல் திட்டங்களை முழுவீச்சில் நிகழ்த்த பெருந்தொற்று வாய்ப்பாக அமைந்துவிட்டது’ என ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவிலும் பெருந்தொற்று காலகட்டத்தில் தீவிரவாத செயல்கள் அதிகரித்ததை தேசிய குற்ற ஆவணக்கூட அறிக்கை வெளிப்படுத்துகிறது. 2020-ஆம் ஆண்டில் நம் நாட்டில் நிகழ்ந்த 398 தீவிரவாத, பயங்கரவாதத் தாக்குதல்களில் 327 பேர் உயிரிழந்தனர். 2021-ஆம் ஆண்டில் நிகழ்ந்த 486 தீவிரவாத, பயங்கரவாதத் தாக்குதல்களில் 407 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் இந்தியாவில் நிகழ்ந்த தீவிரவாத, பயங்கரவாதத் தாக்குதல்களில் இருபதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்; 31,000-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

தீவிரவாத, பயங்கரவாத நிகழ்வுகள் குறித்து 163 உலக நாடுகளில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தீவிரவாத செயல்கள் அதிகமாக நிகழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 17-வது இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மாநிலங்களில் தீவிரவாத செயல்கள் தொடர்ந்து நிகழும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடும் இடம் பெற்றிருக்கிறது. மீனம்பாக்கம் விமான நிலைய குண்டு வெடிப்பு (1984), ராஜூவ்காந்தி படுகொலை (1991), சென்னை இந்து முன்னணி அலுவலக குண்டு வெடிப்பு (1993), கோவை நகரில் தொடர் குண்டு வெடிப்பு (1998), சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு (2014), கோவை நகரில் கார் வெடிப்பு (2022) ஆகியவை தமிழ்நாட்டில் நிகழ்ந்த தீவிரவாத செயல்களில் முக்கியமானவை.

இடதுசாரி தீவிரவாதிகளின் செயல்பாடுகள் தமிழ்நாட்டின் சில குறிப்பிட்ட மாவட்;டங்களில் அதிகளவில் நிகழ்ந்தன. அவர்களின் தாக்குதல்களில் பொதுமக்கள் மட்டுமின்றி, காவல்துறையினரும் உயிரிழந்தனர்.

அவர்களை எதிர்கொள்வதில் தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளில் பத்தொன்பது பேர் என்கவுன்டரில் இறந்து போனார்கள். பலர் கைது செய்யப்பட்டு, குற்ற வழக்குகளை எதிர்கொண்டனர். 1980-களில் இடதுசாரி தீவிரவாதிகளின் செயல்பாடுகள் தமிழ்நாட்டில் பெருமளவில கட்டுப்படுத்தப்பட்டது.

மதத் தீவிரவாதம், குறிப்பாக இஸ்லாமியத் தீவிரவாதம் தமிழ்நாடு மட்டுமின்றி உலக நாடுகளையே அச்சுறுத்தும் தீவிரவாதமாக விளங்குகிறது. ‘அல் காய்தா’ என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு 2001-ஆம் ஆண்டில் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையத்தின் வானுயர்ந்த கோபுரங்கள் இரண்டையும் கடத்தப்பட்ட விமானங்களைக் கொண்டு தகர்த்து, மூவாயிரம் பேரை உயிரிழக்கச் செய்தது. இக்கொடூரச் செயல் உலக நாடுகளை இஸ்லாமிய மதத் தீவிரவாத்திற்கு எதிராகச் செயல்பட ஒருங்கிணைந்துள்ளது.

உலக வர்த்தக மையத்தின் கோபுரங்கள் தகர்த்ததைத் தொடர்ந்து, அல்- காய்தா மீதான நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரம் காட்டியது. உலக நாடுகள் அனைத்தும் இஸ்லாமிய தீவிரவாதிகள் மீதான கண்காணிப்பை அதிகப்படுத்தின. அதைத் தொடர்ந்து, இஸ்லாமிய தீவிரவாதிகள் புதிய அமைப்புகளை உருவாக்கி செயல்படத் தொடங்கினர். அவற்றில் ஒன்று ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ எனக் குறிப்பிடப்படும் ‘இஸ்லாமிய தேசம்’.

இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் தீவிரவாத அமைப்பு என அறிவிக்கப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ், சில ஆண்டுகள் தீவிரவாத செயல்களில் வெளிப்படையாக ஈடுபடவில்லை. மாறாக, தனது நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்திக் கொள்வதிலும், உலக நாடுகளில் ஆதரவாளர்களைத் திரட்டுவதிலும் கவனம் செலுத்தியது.

சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்;வில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசியா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட 29 நாடுகளில் 2014-ஆம் ஆண்டு முதல் நடத்திய தீவிரவாதத் தாக்குதல்களில் 2,043 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 29-ஆம் தேதியன்று இஸ்லாமிய தீவிரவாதிகள் ஆப்பிரிக்காவிலுள்ள சோமாலியா நாட்டின் தலைநகரில் நடத்திய கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். முந்நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் 23-ஆம் தேதியன்று கோவை நகரில் நிகழ்ந்த கார் வெடிப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் சிலர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சூழலில், சில தினங்களுக்கு முன்பு ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் இணையம் மூலம் தொடர்பிலிருந்த நபர் ஒருவரை திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இணையத்தின் மூலம் உறுப்பினர்களைத் தேர்வு செய்து, தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது குறித்த பயிற்சியை ஐ.எஸ்.ஐ.எஸ் அளித்து வருகிறது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர் குண்டு வெடிப்பு (1998), கார் வெடிப்பு (2022) ஆகிய இரு தீவிரவாத சம்பவங்களை 25 ஆண்டுகால இடைவெளியில் கோவை நகர் சந்தித்துள்ளது. தொடர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, கோவை நகர் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் தீவிரவாத செயல்களை முன்னறிந்து, எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு காவல்துறை பலப்படுத்தப்பட்டது.

மாநில உளவுத்துறையிலும் சிறப்பு பிரிவுகள் உருவாக்கப்பட்டன. இருப்பினும், இரண்டாவது முறையாக கோவை நகர் தீவிரவாதிகளின் தாக்குதலை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டது.

1998-ஆம் ஆண்டில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பின்னர், கோவை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் மேற்கொண்ட தீவரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளால், கோவை நகர் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

காலப்போக்கில் தீவிரவாதிகளின் செயல்கள் மீதான கண்காணிப்பை காவல்துறை தளர்த்தியதும், அண்டை மாநிலத்திலுள்ள இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சார்ந்தவர்களின் நடமாட்டம் கோவை நகரில் அதிகரித்ததும், இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகளை சில மதவாத அமைப்புகள் வெளிப்படையாக பேசிவருவதும் கோவை நகர் இரண்டாவது முறையாக தீவிரவாதிகளின் தாக்குதலை எதிர்கொள்ள காரணமாக அமைந்துவிட்டன.

பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் இஸ்லாமிய தீவிரவாத செயல்கள் நிகழ்வதற்கான சூழல் உள்ள நகரங்களின் பட்டியலில் கோவை நகர் மட்டுமின்றி, வேறு சில ஊர்களும் இடம் பெற்றுள்ளதை கடந்த கால நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.

துரித புலன் விசாரணை, தீவிரவாதிகளை கைது செய்தல், நீதிமன்ற விசாரணை போன்ற நடவடிக்கைகளால் மட்டும் தீவிரவாத செயல்கள் இனிவரும் காலத்தில் நிகழாமல் தடுத்துவிட முடியாது.

தீவிரவாதிகளுக்கு மறைமுக ஆதரவு மனநிலை பொதுமக்களிடம் ஏற்படாத சூழலை ஏற்படுத்துதல், தீவிரவாதிகளைக் கண்காணிப்பதில் தொடர் நடவடிக்கை, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தொய்வின்றி செயல்படுத்துவதில் மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்பு, மேலைநாடுகளுடன் இணைந்து உலகளாவிய நிலையில் தீவிரவாதத்தை எதிர்கொள்ளுதல் போன்றவை தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த துணைபுரியும் நடவடிக்கைகள் ஆகும்.

தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை தொடர்ந்து கண்காணித்துவரும் நடைமுறை காவல்துறையில் குறைந்துவி;ட்டது. வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வந்து தங்கும் சந்தேக நபர்கள் மீதான கண்காணிப்பு எதுவும் நடைமுறையில் இல்லை.

களப்பணியில் ஈடுபட்டு, தீவிரவாதம் தொடர்பான உளவுத் தகவல்களைத் திரட்டுவதற்கு அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பு தேவை. மேலோட்டமாக உளவு தகவல் சேகரிக்கும் முறையைத் தவிர்த்துவிட்டு, கள எதார்த்த நிலையை முன்கூட்டியே உணர்ந்து, தீவிரவாத சம்பவம் நிகழாமல் தடுத்து நிறுத்த துணைபுரியும் வகையில், உளவுத்துறை கட்டமைக்கப்பட வேண்டியதின் அவசியத்தை கோவை சம்பவம் உணர்த்துகிறது.

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

(14.11.2022 – ஆம் தேதியன்று தினமணி நாளிதழில் வெளியான கட்டுரை)

Previous post அதிகரித்துவரும் சிறார் குற்றங்கள்
Next post <strong>பெண் சிறைவாசிகளின் பிரச்னைகள்</strong>

3 thoughts on “அறிவுடையார் ஆவது அறிவார்!

 1. கட்டுரை, காவல் துறைக்கு தேவையான ஒன்று.நன்று.
  உளவுத்துறை கட்டமைப்பு முறையை நடைமுறைபடுத்த வேண்டியதை தெளிவாக கூறுகிறது.
  நிர்வாக துறையும் ,காவல் துறையுடன் இணைந்து செயல்பட வேண்டிய நிர்வாக சீர்திருத்தமும் தேவை.
  வருவாய் துறையில், சட்டம், ஒழுங்கு சம்பவங்கள் போது அமைக்கப்படும் செக்டார் மேஜிஸ்திரேட் என்ற பணி,
  எல்லா காலங்களிலும் காவல் துறையோடு செயல்படுத்துவதற்கான
  வழி முறைகள் ஆராயப்பட வேண்டும்.
  கட்டுரை நிர்வாகத்தினர் யோசிக்க வேண்டிய ஒன்று.

 2. மிகவும் முக்கியமான தலைப்பில் இந்த கட்டுரை அமைந்துள்ளது சிறப்பு.
  நான் அறிந்த வரையில் தீவிரவாதத்திற்கு எதிரான அரசின் நடவடிக்கை தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசியல் (ஓட்டு) காரணங்களுக்காக கடுமையாக இல்லை. உதாரணமாக குறிப்பிட்ட மதத்தின்/கட்சியின்/அமைப்புக்களின் தலைவர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதும், அவர்கள் காவல்துறையினரின் PSO பாதுகாப்புடன் தான் நடமாட வேண்டிள்ள நிலை தற்போதும் உள்ளது.
  இது போன்ற குற்றங்களைச் செய்பவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மிகப் பெரும்பான்மையான அந்த மதத்தினர் அமைதி விரும்புபவர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் வசிக்கும் சில ஊர்களில் தங்கள் வீட்டு பையன்களை ‘..இயக்கம்’ என்ற வலைக்குள் விழாமல் இருக்க சொந்த வீடுகளை விட்டு விட்டு வேறு ஊருக்கு பையன்களை அழைத்துக் கொண்டு குடிபெயரும் நிகழ்வுகள் பல நடந்து வருகின்றன. இந்த கோயம்புத்தூர் நிகழ்வில் தாக்குதல் நடத்தச் சென்று இறந்த நபருக்கு தாங்கள் எந்த ஆதரவும் வழங்க மாட்டோம் என்று ஜமாத் அறிவித்தது மிகவும் வரவேற்புக்குரியது. இந்த நிலை தொடர்வது மிகவும் அவசியம்.
  சமீப காலங்களாக பெரும்பான்மை மக்களிடையே ஒன்று சேரும் எண்ணம் வலுவடைந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக.. குறிப்பிட்ட மதத்தவரின் வியாபார ஸ்தலங்களில் பொருட்கள் வாங்குவதில்லை என்ற முடிவும் சில இடங்களில் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடரும் பட்சத்தில்.. மிகவும் ஆழமான பிளவு உண்டாவதைத் தடுக்க முடியாமல் போகும். சிறுபான்மையினர் என்ற பெயரிலும் அரசியல் காரணங்களுக்காகவும் செய்யும் சில செயல்களால் பெரும்பான்மை மதத்தினர் பாதிக்கப்படும் போது நாளடைவில் பெரும் பிரச்சினைகள் ஏற்படும் என்பதை மறுக்க முடியாது. இதை ஆளும் அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை. இந்த சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட மதத்தின் தலைவர்களே இது போன்ற செயல்களில் ஈடுபடுவர்களுக்கு தங்கள் ஆதரவு இல்லை என்று வெளிப்படையாக அறிவிப்பதும் நல்லெண்ண அடிப்படையில் கோயிலுக்குச் சென்று அங்குள்ள இந்து சமயப் பொறுப்பாளர்களையும் சந்தித்தது மிகவும் பாராட்டுக்குரியது. இது போன்ற சகோதர உணர்வுகள் நல்ல தீர்வாகத் தெரிகிறது.
  மற்றொரு புறம் சில நேரங்களில் சம்பந்தப்பட்ட உளவுத்துறை அளிக்கும் பல முக்கியமான தகவல்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படாமல் வீணாவதும் நடக்கிறது. மேலும் காவல்துறையை முழுமையாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  இது போன்ற குற்றங்களுக்கு எதிராக சிறுபான்மையினர்,மனித உரிமை போன்ற பஞ்சாங்கங்களை எல்லாம் கொஞ்சம் ஓரம் வைத்து விட்டு “தேவையான” நடவடிக்கைகளை தயங்காமல் எடுத்தால் மட்டுமே தேசம் உருப்படும். எதிர்காலத்தில் மக்கள் நிம்மதியாக வாழ முடியும் 🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *