பெண் சிறைவாசிகளின் பிரச்னைகள்

இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டதற்காக பெண்கள் பலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைவாசத்தின் பொழுது உயிரிழந்த பெண்களும் உண்டு. சிறையில் உயிரிழந்த பெண்மணிகளில் கஸ்தூர்பா காந்தியும் ஒருவர்.

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை கைதிகளாகவும், தண்டனை கைதிகளாகவும் சிறையில் அடைத்துவைக்கும் பழக்கம் உலக நாடுகளில் நடைமுறையில் இருந்து வருகிறது. காலப்போக்கில் ஆண்களை மட்டுமின்றி, பெண்களையும் சிறையில் அடைத்து வைக்கப்படும் நடைமுறை தொடங்கியது. ஆண் சிறைவாசிகளும், பெண் சிறைவாசிகளும் ஒரே சிறைச்சாலையில் தனித்தனியாக தங்க வைக்கப்பட்டனர்.

தொழிற்புரட்சியின் விளைவாக ஆண்களும், பெண்களும் தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்காக குடும்பத்துடன் அவரவர் கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி குடிபெயர்ந்தனர். அதன் விளைவாக நகரங்களில் திருட்டு, கொள்ளை, கலவரம் போன்ற குற்றங்கள் அதிகரித்தன. வறுமையின் காரணமாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்தது.

சிறை நிர்வாகத்தையும், சிறைவாசிகளின் பாதுகாப்பையும் கவனித்துவந்த ஆண் சிறை அலுவலர்கள், ஆண் சிறைவாசிகள் ஆகியோரின் பாலியல் துன்புறுத்தல்களை சகித்துக் கொண்டும்,   பெண்களுக்குத் தேவைப்படும் தனியுரிமை (பிரைவசி) எதுவுமின்றியும் பெண் சிறைவாசிகள் சிறையில் இருந்து வந்தனர்.

இந்த சூழலில் 18-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் பெண்களுக்கென்று தனியாக சிறைகள் ஏற்படுத்தப்பட்டன. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவிலும், அதைத் தொடர்ந்து பிரிட்டனிலும் ‘பெண்கள் சிறைகள்’ உருவாக்கப்பட்டன.

ஆங்கிலேயர்களின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இருந்த இந்;தியாவிலும் சிறை சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்ய 1919-ஆம் ஆண்டில் சர் அலெக்ஸாண்டர் கார்டியூ தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. சிறைவாசிகளுக்கு பிரம்படி, உடல்வதை செய்யும் தண்டனை கொடுக்கக்கூடாது போன்றவை இக்குழுவின் பரிந்துரைகளில் முக்கியமானவை.

இந்தியா விடுதலையடைந்த பின்னர் சிறை சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்ய நீதியரசர் ஏ.என்.முல்லா தலைமையில் 1980-ஆம் ஆண்டில் ‘அகில இந்திய சிறை சீர்திருத்தக் குழு’ அமைக்கப்பட்டது. சிறையில் இருந்து விடுவிக்கப்படுபவர்களின் மறுவாழ்வு குறித்து திட்டமிடுதல், சிறைவாசிகளுக்கு மருத்துவ வசதிகள் செய்து கொடுத்தல், பெண் சிறைவாசிகளின் பிரச்னைகளை அறிந்து செயல்படுதல், பொதுமக்களையும் செய்தியாளர்களையும் சிறை வளாகத்தினுள் சென்று பார்வையிட்டு, சிறையின் நடைமுறைகள் குறித்து அறிந்து கொள்ள அனுமதித்தல் போன்றவை அக்குழுவின் பரிந்துரைகளில் முக்கியமானவை.

மேலைநாடுகளைப் போன்று இந்தியாவிலும் பெண்களுக்கென்று தனியாக ‘பெண்கள் சிறைகள்’ ஏற்படுத்துதல், பெண் சிறைவாசிகளைச் சோதனையிட பெண் காவலர்களைப் பயன்படுத்துதல், பெண் சிறைவாசிகளுக்கு பெண் மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சையளித்தல், பெண் சிறைவாசிகளுடன் அவர்களின் குழந்தைகள் தங்க அனுமதித்தல் போன்ற பெண் சிறைவாசிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து விரிவான அறிக்கையை 1987-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட நீதியரசர் கிருஷ்ணய்யர் தலைமையிலான குழு மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.      

அதைத் தொடர்ந்து, பெண்களுக்கென்று பிரத்யோகமாக ‘பெண்கள் சிறைகள்’ நம் நாட்டில் அமைக்கப்பட்டன. சில மாதங்களுக்கு முன்பு இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்திய சிறைகள் தொடர்பான புள்ளிவிவரங்களின் படி, இந்தியாவில் உள்ள 1,316 சிறைகளில் 32 சிறைகள் ‘பெண்கள் சிறைகள்’ ஆகும். அவைகளில் ஐந்து பெண்கள் சிறைகள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன.

பெண் சிறைவாசிகளின் குழந்தைகளை சிறை வளாகத்தில் தங்க வைத்து, பராமரிப்பது தொடர்பாக 2006-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழிகாட்டு நெறிகளை வழங்கியுள்ளது.

பெண் சிறைவாசிகள் தங்களின் குழந்தைகளை ஆறு வயது நிறைவடையும் வரை அவர்களைத் தங்களுடன் சிறை வளாகத்தினுள் தங்கவைத்து பராமரிக்கலாம் என்றும், குழந்தைகளுக்குத் தேவையான உணவு, உடை, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளையும், மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு குழந்தைகள் காப்பகமும், ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு மழலையர் பள்ளியும் மாநில அரசு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

நம்நாடு விடுதலையடைந்தபோது, 8 சதவீதத்திற்கும் குறைவான பெண்கள்தான் கல்வி கற்றவர்களாக இருந்தனர். 2021-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 70% பெண்கள் நம் நாட்டில் கல்வி கற்றவர்களாக உள்ளனர். ஆண்டுதோறும் கல்வி கற்கும் பெண்களின் சதவீதம் அதிகரித்து வருகிறது. சுதந்திர இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளில் பெண்களிடையே கணிசமாக அதிகரித்துள்ள படிப்பறிவால், குற்றச் செயல்களில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டும். ஆனால், கள நிலவரம் அப்படியில்லாமல், அதிர்ச்சியூட்டும் தகவலை வெளிப்படுத்துகிறது.

இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சிறப்பு சட்டங்களின் கீழ் நம் நாட்டில் 2020-ஆம் ஆண்டில் 63,465 பெண்களும், 2021-ஆம் ஆண்டில் 83,645 பெண்களும் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

ஓராண்டு காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 32% அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் நம் நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 10% அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக 2018-ஆம் ஆண்டில் 4,158 பெண்களும், 2021-ஆம் ஆண்டில் 5,861 பெண்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த மூன்று ஆண்டுகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 41மூ அதிகரித்துள்ளது.

‘இந்திய சிறை புள்ளிவிவரங்கள்-2021’-இன் படி 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதியன்று இந்;தியாவிலுள்ள அனைத்து பெண்கள் சிறைகளில் 3,808 பெண் சிறைவாசிகள் தங்கியிருந்தனர். அவர்களில் 573 பேர் தமிழ்நாட்டிலுள்ள பெண்கள் சிறைகளில் தங்கியிருந்தனர்.

2021-ஆம் ஆண்டின் இறுதி நாளன்று அதிகமான பெண் சிறைவாசிகள் ‘பெண்கள் சிறை’களில் தங்கியிருந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 2021-ஆம் ஆண்டின் இறுதி நாளன்று நம் நாட்டிலுள்ள அனைத்து பெண்கள் சிறைகளில் தண்டனை சிறைவாசிகளாகவும், விசாரணை சிறைவாசிகளாகவும் தங்கியிருந்த பெண் சிறைவாசிகளில் 1,650 பேர், அவர்களின் 1,867 குழந்தைகளுடன் தங்கியிருந்தனர். நம் நாட்டில் ஆண்டுதோறும் ஆறு வயதுக்கும் குறைவான ஆயிரக்கணக்கான குழந்தைகள் அவர்களின் குழந்தைப் பருவத்தை சிறைகளில் கழித்துவருகின்றனர். இத்தகைய சூழல் ஆரோக்கியமான சமுதாயத்திற்கு வழிவகுக்காது.

குடும்ப பொருளாதார சூழல் காரணமாக திருட்டு, சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல், சாலையோர பாலியல் குற்றம் போன்ற செயல்களில் கடந்த காலத்தில் நம்நாட்டில் ஈடுபட்டுவந்த பெண் சமூகத்தினர், அக்குற்றச் செயல்களில் இருந்து பெருமளவில் மீண்டுவிட்டனர்.

பெண் கல்வி முக்கியத்துவம் பெற்றுவருகின்ற இன்றைய சூழலில் வர்த்தகம், நிதி நிறுவனம், தொழில்துறை போன்றவற்றில் பெண்கள் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். அவர்களில், நிதி மோசடிகளில் ஈடுபட்டு, குற்ற வழக்குகளை எதிர்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது.

கையூட்டு பெற்ற குற்றத்திற்காக கைது செய்யப்படும் பெண் அரசு அதிகாரிகளின் எண்ணிக்கையும் நம் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போதைப் பொருள், தங்கம் கடத்தல், குழந்தை கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் பெண்கள் ஈடுபட்டு, சிறை செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன.

நம் நாட்டில் தொடர்ந்து நிகழும் வரதட்சணை மரணங்கள் தொடர்பான குற்ற வழக்குகளில் ஆண்டுதோறும் சுமார் மூவாயிரம் பெண்களும், கொலை குற்றங்களில் ஈடுபட்டதற்காக ஆண்டுதோறும் சுமார் நான்காயிரம் பெண்களும் கைது செய்யப்பட்டு, சிறைவாசம் அனுபவிக்கின்றனர்.

குற்றச் செயலில் நேரடியாக ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கும் பெண்கள் மட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்கள் செய்த குற்றச் செயலுக்குத் துணைபோன காரணத்திற்காக கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கும் பெண்களும் உண்டு.

ஒரு குற்றச் செயலை ஆண், பெண் இருபாலரில் யார் செய்தாலும், சட்டத்தின்படி தண்டனையின் அளவு இருபாலாருக்கும் சமமாக உள்ளது.

ஆனால், ஒரு பெண்ணுக்கு வழங்கப்படும் சிறை தண்டனை அவரை மட்டும் பாதிப்பதில்லை. அத்தண்டனையின் தாக்கம் அவரது குழந்;தைகளையும், அவரது பராமரிப்பில் உள்ள மூத்த குடும்ப உறுப்பினர்களையும் பெருமளவில் பாதிப்படையச் செய்கிறது.

கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் முன்னேறிவரும் பெண் சமூகத்தை குற்றச் செயல்களில் ஈடுபடத் தூண்டும் வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் இன்றைய சமுதாயத்தில் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சூழல் சமுதாய வளர்ச்சியில் ஏற்படுத்தும் பின்னடைவு குறித்து விழிப்புடன் பரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது.

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

(28.11.2022-ஆம் தேதிய தினமணி நாளிதழில் வெளியான கட்டுரை)

Previous post அறிவுடையார் ஆவது அறிவார்!
Next post சிறார் குற்றவாளியும், மென்மையான அணுகுமுறையும்

2 thoughts on “பெண் சிறைவாசிகளின் பிரச்னைகள்

  1. அய்யா வணக்கம்
    பெண்கள் சிறைவாசிகளாக அதிகமாகுவது மிக வேதனை அதிலும் கையூட்டு பெற்று வருவது மற்றும் கொலை செய்து சிறைக்கு வருகிறார்கள். என்பதை நினைக்கும் பொழுது கஷ்டம்

  2. குற்றச் செயல்களில் பெண்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார்கள் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கிறது.
    பள்ளிப் பருவத்தில் இருந்தே ஒழுக்கம் மற்றும் பண்பு சார்ந்த விஷயங்களை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் வலியுறுத்துவது அவசியம் என்று கருதுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *