சிறார் குற்றவாளியும், மென்மையான அணுகுமுறையும்

கடந்த கால் நூற்றாண்டு காலமாக தீவிரவாதம், குற்ற நிகழ்வு ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் நம்நாட்டு காவல்துறை நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. சட்டத்திற்கு முரணாகச் செயல்படும் சிறார்களை சீர்திருத்தும் நோக்கத்தில் சிறார் நீதிச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் திருட்டுக் குற்றம் புரிந்த ஒருவரை தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, நூறாவது முறையாக தற்போது கைது செய்யப்படுவதாக அக்குற்றவாளி கூறியுள்ளார். ஐம்பத்தைந்து வயதாகும் அக்குற்றவாளி முதன் முறையாக தனது 14-ஆவது வயதில் திருட்டுக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, சிறார் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

காவல்துறையினரால் பராமரிக்கப்பட்டுவரும் குற்ற ஆவணங்களைப் பரிசீலனை செய்ததில், ஒரு குறிப்பிட்ட நகரத்தில் மட்டும் கடந்த 12 ஆண்டுகளில் 72 திருட்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக அக்குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மற்ற மாவட்டங்களில் அக்குற்றவாளி செய்த திருட்டு குற்றங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படவில்லை.

சிறார் குற்றவாளியாக பரிணமித்த இந்த குற்றவாளி தொடர்ந்து நாற்பது ஆண்டுகளாகத் திருட்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டுவருவதும், திருடுவதையே தொழிலாகக் கொண்டு, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியைத் தன் குடும்பத்திற்குக் கொடுத்துவரும் நடைமுறையை இக்குற்றவாளி பின்பற்றிவருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருடிய குற்றச் செயலுக்காக 14-ஆவது வயதில் சிறார் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிறுவனின் நடத்தையில் சீர்திருத்தம் ஏற்படாமல், வாலிபப் பருவம் அடைந்த பின்னரும் திருட்டுக் குற்றம் புரிவதையே தொழிலாக்கிக் கொள்ள ஏதுவாக அமைந்துள்ள இன்றைய சமுதாயச் சூழலை இச்சம்பவம் வெளிப்படுத்துகிறது.

கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, பாலியல் வன்முறை போன்ற கொடுங்குற்றங்களில் சிறார்கள் ஈடுபடும் சம்பவங்கள் நம்நாட்டில் தொடர்ந்து அதிகரித்துவருவதை தேசிய குற்ற ஆவணக்கூடத்தின் புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.

16 வயதுடைய மூன்று சிறார்கள் உட்பட மொத்தம் நான்கு பேர் குடிபோதையில் கடை உரிமையாளர் ஒருவரைக் கத்தியால் குத்தி படுகாயம் ஏற்படுத்தி, அப்போது அங்கிருந்த ஏழு நபர்களையும் கடுமையாகத் தாக்கிய சம்பவம் கடந்த மாதத்தில் காஞ்சிபுரம் நகரில் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று சிறார்களை காவல்துறையினர் கைது செய்து, சிறார் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்துள்ளனர்.

குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறார்களின் நடத்தையை சீர்படுத்துவதற்காக, அவர்களை கூர்நோக்கு இல்லங்கள் மற்றும் சிறப்பு இல்லங்களில் தங்க வைக்கும் நடைமுறை நம்நாட்டில் பின்பற்றப்பட்டு வருகிறது. சில மாதங்கள் அங்கு தங்கிச் செல்லும் சிறார்களின் நடத்தையில் சீர்திருத்தம் ஏற்படுகிறதா? இது குறித்த ஆய்வு எதிர்மறையான கருத்தை வெளிப்படுத்துகிறது.

உணவு, உடை, தங்குமிடம், பொழுதுபோக்க தொலைக்காட்சி பெட்டி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் போன்ற வசதிகள் கூர்நோக்கு இல்லங்களில் செய்து கொடுப்பதால் மட்டும், சட்டத்திற்கு முரணாகச் செயல்படும் மனநிலை உடைய சிறார்களின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுவிடாது. அச்சிறார்களின் ஆழ்மனதில் தேங்கிக்கிடக்கும் வக்கிர உணர்வுகளை வெளிக்கொண்டுவர, அவர்களுடன் தொடர்ந்து பேசி, பழகி, சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும் மனப்பக்குவத்தை அச்சிறார்களிடம் ஏற்படுத்த வேண்டும். இத்தகைய மன மாற்றத்தை சிறார்களிடம் கூர்நோக்கு இல்லங்களும், சிறார் சிறப்பு இல்லங்களும் ஏற்படுத்தாத நிலையையே தற்போது காணமுடிகிறது.

கூர்நோக்கு இல்லங்களில் இருந்து வெளியே அனுப்பி வைக்கப்பட்ட சிறார்கள் சிலரிடம் நடத்திய உரையாடலின் போது ‘விருப்பம்போல் மது அருந்த வேண்டும்; போதைப் பொருள் பயன்படுத்த வேண்டும்’ என்ற ஆசையை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

கூர்நோக்கு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் சிறார்கள் இரவு நேரங்களில் கூர்நோக்கு இல்லக் காவலர்களைத் தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிச் செல்கின்ற சம்பவங்களும் தொடர்ந்து நிகழ்கின்றன.

குற்றச் செயல்களில் ஈடுபட்ட காரணத்திற்காக கூர்நோக்கு இல்லங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் சிறார்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக நம் நாட்டில் அதிகரித்து வருகிறது. கூர்நோக்கு இல்லத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சிறார்கள் மீண்டும், மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது.

குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக கூர்நோக்கு இல்லம் மற்றும் சிறார் சிறப்பு இல்லத்தில் சில மாதங்கள் தங்க வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து விடுவிக்கப்படும் சிறார்களில் சிலர் அந்தந்த பகுதியில் உள்ள ‘குற்றக் கும்பல்’ உடன் இணைந்து, குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற சம்வங்களும் அதிகரித்து வருகின்றன.

சிறார் சீர்திருத்தப்பள்ளியில் இருந்து வெளியே அனுப்பி வைக்கப்படும் சிறார்களின் செயல்பாடுகளை சில ஆண்டுகள் கண்காணித்து வர வேண்டும் என்ற சிறார் நீதிச்சட்டத்தின் வழிகாட்டுதல் முழுமையாகப் பின்பற்றப்படாத நிலையே கள நிலவரமாக உள்ளது. இத்தகைய சூழலால் சீர்திருத்தப்பள்ளியில் இருந்து விடுவிக்கப்படும் சிறார் குற்றவாளிகள் சிலர் குற்றக் கும்பலுடன் தங்களை இணைத்துக் கொண்டு, குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்ற நிலை நிலவுகிறது.

கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற கொடுங்குற்றங்களில் ஈடுபடும் சிறார்கள் மீதான குற்ற விசாரணையை சிறார் நீதிக்குழுமம் மேற்கொண்டு, அச்சிறார்கள் அதிகபட்சம் மூன்றாண்டுகள் சிறப்பு இல்லத்தில் தங்கியிருக்க வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கிறது. ஊடகங்களின் விமர்சனங்களுக்கு உள்ளாகும் வழக்குகளில் மட்டுமே விசாரணை மேற்கொள்ளும் பொறுப்பை நீதிமன்றத்திடம் சிறார் நீதிக் குழுமம் ஒப்படைப்பதைக் காணமுடிகிறது. 

சிறார் குற்றங்கள் தொடர்பான மேல்முறையீடு வழக்கு ஒன்றில் விசாரணை மேற்கொண்ட இந்திய உச்சநீதிமன்றம் 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வழங்கிய தீர்ப்பில், ‘கொடூரம் மற்றும் மிருகத்தனமான குற்றச் செயல்களில் சிறார்கள் ஈடுபட்டுவருவதைப் பார்க்கும் போது, சிறார் நீதிச்சட்டம் இயற்றப்பட்டதின் நோக்கம் நிறைவேறவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளது.

ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலுள்ள ‘கதுவா’ என்ற இடத்தில் 2018-ஆம் ஆண்டில் எட்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய குற்றவாளி 18 வயதிற்கும் குறைவானவர் என்ற காரணத்தால், அக்குற்றவாளி மீதான விசாரணையை நீதிமன்றத்தில் நடத்தாமல், சிறார் நீதிச் சட்டத்தின்படி சிறார் நீதிக் குழுமம் மேற்கொண்ட நடவடிக்கையை ஜம்மு – காஷ்மீர் உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றம் வழங்கிய இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு கடந்த நவம்பர் மாதத்தில் விசாரணைக்கு வந்தது.

வயது தொடர்பான ஆவணங்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு, இக்குற்றவாளியை சிறார் எனக் கருத முடியாது என்றும், மருத்துவ நிபுணர்களின் அறிக்கையின் படி இக்குற்றவாளியின் வயது பத்தொன்பதுக்கும், இருபத்தி மூன்றுக்கும் இடைபட்டது என்றும், அதன் அடிப்படையில் இக்குற்றவாளி மீதான பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி நீதிமன்றத்தில் நடத்த வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

‘கொலை, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் கடத்துதல் போன்ற கொடுங்குற்றங்களில் ஈடுபடும் சிறார்களை நல்;வழிப்படுத்தும் நோக்கத்தில், அவர்கள் செய்த குற்றங்களை மென்மையான முறையில் அணுக வேண்டும் என்ற சிந்தனை பலரிடம் வெளிப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக கொடூரமான குற்றச் செயல்களில் சிறார்கள் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது, கொடூரமான குற்றச் செயல்களில் சிறார்கள் மென்மேலும் ஈடுபடும் தைரியத்தை சிறார் நீதிச்சட்டத்தின் மென்மையான அணுகுமுறை கொடுக்கின்றதா? என்ற கேள்வி எழுகிறது.

சிறார் நீதிச்சட்டம் இயற்றப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறி வருகிறதா? அச்சட்டத்தில் மாற்றங்கள் ஏதேனும் கொண்டுவரப்பட வேண்டுமா? என்பவை குறித்து அரசாங்கம் கால தாமதமின்றி ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற கொடுங்குற்றங்களில் ஈடுபடும் சிறார்கள் தொடர்பான வழக்குகளில் சிறார் நீதிக்குழுமம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வு அவசியமானது என்பதை கதுவா வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உணர்த்துகிறது.

கடந்த சில ஆண்டுகளில் கூர்நோக்கு இல்லங்களில் இருந்து வெளியே அனுப்பி வைக்கப்பட்ட சிறார்களின் செயல்களைக் கண்காணித்து, அவர்களில் குற்றக் கும்பலின் பிடியில் சிக்கியிருப்பவர்களை அடையாளம் கண்டறிந்து, தக்க நடவடிக்கை மேற்கொள்வது குறித்து சம்பந்தப்பட்ட அரசு துறைகள் பரிசீலனை மேற்கொள்ள வேண்டும்.

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

(03.01.2023-ஆம் தேதிய தினமணியில் வெளியான கட்டுரை இது)

Previous post <strong>பெண் சிறைவாசிகளின் பிரச்னைகள்</strong>

One thought on “சிறார் குற்றவாளியும், மென்மையான அணுகுமுறையும்

  1. தீர ஆலோசித்து முடிவெடுக்க வேண்டிய தலைப்பாக இருக்கிறது.
    தற்போதைய சட்டத்தால் சிறுவர்கள் என்று சொல்லப்படும் பலர் குணத்தால் சிறுவர்களாக இல்லை. தற்போதைய கால சூழ்நிலைகள் காரணமாக இருக்கலாம். போதைப் பொருள் பயன்படுத்துதல், பெண்கள் சகவாசம் போன்றவை சாதாரணமாக இருக்கிறது.
    செய்யும் குற்றங்களின் அடிப்படையில் இவர்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்துதல் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.
    முதலில் அரசு மதுக்கடைகளை மூடினாலேயே நல்ல முன்னேற்றத்தைக் காணமுடியும் என்று நம்புகிறேன் சார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Menu