நீதிமன்ற விசாரணையில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதைத் தடை செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
193 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ‘குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் நடைமுறை தடை செய்யப்பட வேண்டும்’ என்ற பொருள் தொடர்பாக நடைபெற்ற வாக்கெடுப்பில் 125 நாடுகள் ஆதரவாகவும், 37 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்தன.
மரண தண்டனை தடைசெய்ய வேண்டும் என்ற தீர்மானத்திற்கு எதிராக இந்தியா, அமெரிக்கா, சீனா, ஈரான், ஈராக், சவூதி அரேபியா, வடகொரியா, வியத்நாம் உள்ளிட்ட 37 நாடுகள் வாக்களித்தன.
ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட 113 நாடுகளில் மரண தண்டனை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. 50 மாகாணங்களை உள்ளடக்கிய அமெரிக்காவில் 23 மாகாணங்களில் மரண தண்டனை தடை செய்யப்பட்டுள்ளது.
மரண தண்டனைக்கு எதிரான முன்னெடுப்புகளை ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற சூழலில், இந்தியாவில் குற்ற வழக்குகள் மீதான விசாரணையில் நீதிமன்றங்கள் வழங்கும் மரண தண்டனை குறித்த ஆய்வை புதுதில்லியில் அமைந்துள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகம் மேற்கொண்டது.
2022-ஆம் ஆண்டில் விசாரணை நீதிமன்றங்கள் 165 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கியுள்ளன என்றும், கடந்த இருபது ஆண்டுகளைக் காட்டிலும் 2022-ஆம் ஆண்டில்தான் அதிக எண்ணிக்கையிலான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது என்றும் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டில் மரண தண்டனை பெற்ற குற்றவாளிகளில் 51% பேர் பாலியல் வன்முறையுடன் கூடிய கொடுங்குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்றும், அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனை வழங்கிய மாநிலங்களின் வரிசையில் குஜராத் முதலிடமும், உத்திரபிரதேசம் இரண்டாம் இடமும் பெற்றுள்ளன என்றும் அந்த ஆய்வில் தெரியவருகிறது.
இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 539 குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது என்றும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நம் நாட்டில் அதிகரித்துவரும் மரண தண்டனையால் கொடுங்குற்ற நிகழ்வுகள் குறையும் என்ற நம்பிக்கையை ஒரு சாரார் வெளிப்படுத்துகின்றனர். அதே சமயம், மரண தண்டனையானது மனித உரிமைக்கு எதிரான உச்சகட்ட அநீதி என்பதால், மரண தண்டனையைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் நம்நாட்டில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
மரண தண்டனை தடை செய்யப்பட்டால், வன்முறையுடன் கூடிய கொடுங்குற்றங்கள் அதிகரித்து, நாட்டின் அமைதியான சூழல் சீர்குலைந்து, பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுவிடும் என்ற வாதம் ஏற்புடையதல்ல என்பதற்கு சான்றாக ஐரோப்பிய நாடுகள் திகழ்கின்றன.
ஐம்பது நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பா கண்டத்தில், ஒரே ஒரு நாட்டைத் தவிர ஏனைய நாடுகளில் மரண தண்டனை தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம்’ ஆண்டுதோறும் உலக நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு, உலக அமைதி குறியீட்டுப் பட்டியலை வெளியிடுகிறது. அதன்படி, 2022-ஆம் ஆண்டில் உலக நாடுகளில் பாதுகாப்பான 20 நாடுகளின் தரவரிசைப் பட்டியலில், 14 நாடுகள் ஐரோப்பா கண்டத்தில் அமைந்துள்ளன. அதே சமயம், உலக அமைதி குறியீடு பட்டியலில் இந்தியா 135-வது இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மரண தண்டனை தடை செய்யப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பானதாகவும், மரண தண்டனை நடைமுறையில் இருந்துவரும் இந்தியா அமைதி மற்றும் பாதுகாப்பு தர வரிசை பட்டியலில் மிகவும் பின்தங்கி இருப்பதும் ஏன்?
இந்தியாவில் குற்றவியல் நீதி நிர்வாக நடைமுறை பலவீனமாகி வருகின்ற நிலையைக் காணமுடிகிறது. வழக்கு பதிவு செய்யப்படாத குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கின்ற நிலையில், பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் மீதான நீதிமன்ற விசாரணை முடிவுக்கு வர எடுத்துக்கொள்ளப்படும் கால அவகாசமும், நீதிமன்ற தீர்ப்பும் அதிர்ச்சியளிக்கும் வண்ணம் உள்ளன.
அமெரிக்காவில் போலியான டாலரைப் பயன்படுத்திய குற்றச் செயலுக்காக 2020-ஆண்டில் அமெரிக்க காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவர் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து அமெரிக்க காவல் அதிகாரிகள் மீது பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் 11 மாதங்களில் புலன் விசாரணையும், நீதிமன்ற விசாரணையும் முடிக்கப்பட்டு, கொலை குற்றத்தை எதிர்கொண்ட காவல் அதிகாரிக்கு 22.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அதே சமயம், 2010-ஆம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் பணிநிமித்தம் மோட்டார் சைக்கிளில் பயணித்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவரைக் கூலிப்படையினர் நாட்டு வெடிகுண்டுகள் வீசி கொலை செய்தனர். கொலை நிகழ்ந்து 13 ஆண்டுகள் கடந்த பின்னரும், உதவி ஆய்வாளரைக் கொலை செய்த குற்றவாளிகள் மீதான கொலை வழக்கின் விசாரணை முடிவு பெறாமல், நீதிமன்ற நிலுவையில் இருந்து வருகிறது.
இவ்வழக்கை போன்று, எண்ணற்ற கொடுங்குற்ற வழக்குகள் நீதிமன்ற விசாரணை முடிவு பெறாமல், பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்து வருவதும் குற்ற நிகழ்வுகள் தொடர்ந்து நிகழக் காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக, காவல் நிலையங்களில் ‘ரவுடிகள்’ என வகைபடுத்தப்பட்டு, கண்காணிப்பில் இருப்பவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை போன்ற கொடுங்குற்ற வழக்குகள் நீதிமன்ற நிலுவையில் இருந்து வருகின்றன.
நீதிமன்ற விசாரணையில் தண்டனையில் முடிவடையும் வழக்குகள் குறித்த ஆய்வை தேசிய குற்ற ஆவணக் கூடம் ஆண்டுதோறும் மேற்கொள்கிறது. அந்த ஆய்வின்படி, 2021-ஆம் ஆண்டில் இந்திய நீதிமன்றங்களுக்கு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கொலை வழக்குகளில் 16.3% வழக்குகளும், கொலை முயற்சி வழக்குகளில் 5.7% வழக்குகளும், கொள்ளை வழக்குகளில் 7.4% வழக்குகளும், வழிப்பறி வழக்குகளில் 3% வழக்குகளும் தண்டனையில் முடிவடைந்துள்ளன.
மிகக் குறைவான எண்ணிக்கையிலான கொடுங்குற்ற வழக்குகள் நீதிமன்ற விசாரணையின் இறுதியில் தண்டனையில் முடிவடைகின்ற நிலையும், எத்தகைய குற்றம் புரிந்தாலும் நீதிமன்ற தண்டனையில் இருந்து தப்பித்துவிடலாம் என்ற உணர்வும் குற்றங்கள் அதிகரித்து வருவதற்கான காரணங்களில் முக்கியமானவையாக விளங்குகின்றன.
தேசிய சட்டப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் இந்தியாவில் மரண தண்டனை பெறும் குற்றவாளிகளில் 24.5 சதவீதத்தினர் பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் இனத்தவர்கள் என்பதும், பொருளாதாரத்தில் பின் தங்கிய குற்றவாளிகள் அதிக எண்ணிக்கையில் மரண தண்டனையடைகின்றனர் என்பதும் தெரியவருகிறது.
செல்வமும், செல்வாக்கும் உள்ள குற்றவாளிகள் பலர் நீதிமன்ற விசாரணையில் தண்டனையின்றி தப்பிவிடுகின்றனர் என்பதையும், பொருளாதாரத்தில் மிகவும் தங்கியிருப்பவர்கள் புலன் விசாரணை, அதைத் தொடர்ந்து நடைபெறும் நீதிமன்ற விசாரணை ஆகியவற்றை முழு பலத்துடன் எதிர்கொள்ள முடியாமல் தண்டனையடைகின்றனர் என்பதையும் இந்த புள்ளி விபரங்கள் உணர்த்துகின்றன.
குற்ற வழக்கில் கைதாகி, சிறை சென்றால் குடும்ப கௌரவம் சீர்குலைந்துவிடும் என்ற உணர்வு கடந்த காலத்தில் நம் சமூகத்தில் நிலவியது. இதன் காரணமாக குற்றச் செயலில் ஈடுபட பலர் தயங்கினர். காலப்போக்கில், கைது, சிறைவாசம் ஆகியவற்றை மக்கள் எளிதில் எதிர்கொள்ளத் தொடங்கிவிட்டனர்.
குற்ற வழக்கில் கைது செய்யப்படும் குற்றவாளிகளும், நீதிமன்ற விசாரணையில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படும் குற்றவாளிகளும் அவர்கள் செய்த குற்றங்களை உணர்ந்து, மனம் திருந்தி, மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடாத சூழலை இன்றை சிறை நிர்வாகம் மற்றும் சிறார் சீர்திருத்தப்பள்ளிகளால் ஏற்படுத்த இயலாத நிலை நிலவுகிறது. குற்றவாளிகளின் சீர்திருத்தம் என்பது நம் நாட்டில் அதிக முக்கியத்துவம் பெறப்படாத நிலையில் இருந்துவருகிறது.
நம் நாட்டில் கொடுங்குற்றங்கள் அதிகளவில் நிகழ்வதில் மது, போதைப் பொருட்களின் பயன்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. கொலை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளில் 40 சதவீதத்திற்கும் சற்று அதிகமானவர்கள் குற்றம் புரியும்போது மது, போதைப் பொருட்களின் ஆளுமையில் இருந்தவர்கள் என்பது ஆய்;வில் தெரியவருகிறது. அதிகரித்துவரும் குடும்ப வன்முறைக்கும் மது, போதைப் பொருட்கள் முக்கிய காரணமாக உள்ளன.
அதிகரித்துவரும் குற்ற நிகழ்வுகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் உலக அமைதி குறியீட்டுப் பட்டியலில் இந்தியாவின் தரம் உயரும்.
பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்
(தினமணி நாளிதழில் 13.03.2023 ஆம் தேதியன்று வெளியான கட்டுரை இது)
Sir,
மிக முக்கியமான ஒர் ஆய்வு அறிக்கையை கொடுத்திருக்கிறீர்கள்.
இது பற்றி சமூக சீர் திருத்த வாதிகள், தேசத்தின் மீது உண்மையான அக்கறையும் பற்றும் கொண்ட உயர் மட்ட அதிகாரிகள் ,நீதி துறை சார்ந்த நீதி அரசர்கள் மற்றும் தன் நலம் கருதாத அரசியல் வாதிகள் அனைவரும் சேர்ந்து உடனடியாக நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
ஆனால்,தற்போது இருக்கும் கால கட்டத்தில் கொடூர குற்றங்கள் அதிகரித்து வரும் சூழ் நிலையில் அந்த கொடூர குற்றம்(பாலியல் வன் முறை மூலம் ஒரு குற்றவாளி ஒரு பெண் எந்த அளவிற்கு கொடும் சித்திரை வதை செய்து சாகடிக்க பட்டு இருப்பாள் என்பதை நினைத்து பார்க்க வெண்டும்) அப்படி செய்த ஒருவனை நீதி மன்றம் மூலம் மரண தண்டனை என்ற ஒர் தண்டனை உடனிடியாக கொடுத்தால் தான் மற்ற ஒருவனுக்கு பயம் வரும்.
மேலும் தாங்கள் குறிப்பிட்டது போன்று மது மற்றும் போதை வஸ்துக்கள் மூலம் நடை பெரும் கொடூர குற்ற சம்பவங்கள் அதிகாரத் து வரும் சூழ் நிலையில் குற்ற வாளிகள் திருந்தி விடுவார்கள் என்று நினைத்தால் அது ஒரு கேள்வி குறியாக த்தான் இருக்கும்.
புராண இதிகாச காலத்தில் கூட தவறு செய்தவர்கள் கடைசியில் மரண தண்டனை மூலம் தான் தண்டிக்க பட்டுள்ளார்கள்.
நமது தேச த்தில் 500 ரூபா லஞ்சம் வாங்கிய ஒருவன் சிறையில் அடைக்க படுவான் ஆனால் 500 கோடி அடித்தவன் சுதந்திரமாக இருப்பான்.
முதலில் அடிப்படை சட்ட விதிகள் மாற்றி அமைக்க பட வெண்டும்,
தவறு செய்தால் தண்டனை உண்டு என்ற விதிகள் இருந்தால் தான் சமுதாயம் நன்றாக இருக்கும்.
அண்ணல் மகாத்மா காந்தி அவர்கள் கூறியது போன்று என்று ஒர் பெண் தன்னம் தனியாக பய மின்றி தெருவில் நடந்து செல்கிராரோ அன்று தான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததின் அறுமயியை உணர முடியும்.
தாங்கள் சமுதாய பணி வாழ்க
தொடரட்டும் தங்களை போன்ற நல்ல அதிகார்களின் தொடர் ஆய்வு அறிக்கைகள்.
நன்கு யோசிக்க வேண்டிய தலைப்பாகக் கருதுகிறேன். ஆனால் மரண தண்டனை நிச்சயமாக இருக்க வேண்டும். பல அப்பாவிகளைக் காவு வாங்கும் தீவிரவாதத் தாக்குதல்கள், தேசத்துக்கு எதிரான சதி சார்ந்த குற்றங்கள் மற்றும் மக்களிடையே அச்சத்தை ஊட்டும் இதர பெருங் குற்றங்களுக்கு மரண தண்டனை வேண்டும். இது ஒரு குறிப்பிட்ட அளவுக்காவது தடுப்பு நடவடிக்கையாக இருக்கும்.
காவல்துறையில் தற்போது நிலவும் தரமற்ற வழக்கு விசாரணைகள், நீதிமன்ற விசாரணையில் நிலவி வரும் தொய்வுகள், இவற்றைச் சரி செய்யவேண்டிய அரசு பாராமுகமாக இருப்பதும் காரணமாக இருக்கிறது.
அமைதி மற்றும் பாதுகாப்பு பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நம் தேசத்தின் தற்போதைய நிலை என்பது சந்தேகப்படுவதாகவே இருக்கிறது. ஏனென்றால் பல நேரங்களில் இவர்கள் வைத்திருக்கும் அளவுகோல் என்பது நம் போன்ற வளரும் தேசங்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது.